search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் மீட்பு பணியில் அரசு ஆர்வம் காட்டவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு
    X

    புயல் மீட்பு பணியில் அரசு ஆர்வம் காட்டவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஆர்வம் காட்டும் அரசு புயல் மீட்பு பணியில் ஆர்வம் காட்டவில்லை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
    அவனியாபுரம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ன. அங்கு 10 பேர் இறந்துள்ளனர். 400 படகுகள் சேதம் அடைந்துள்ளன. ஆனால் அரசு சார்பில் 4 பேர் இறந்துள்ளதாகவும் 80 படகுகள் சேதம் அடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2015-ல் சென்னையில் புயல், 2016-ல் வறட்சி என மக்கள் பாதிக்கப்பட்டாலும் தமிழக அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க வில்லை. நீர் மேலாண்மை திட்டம் அமைக்கப்பட்டு இருந்தால் ஏரி, குளங்களில் தண்ணீரை சேமித்திருக்க முடியும்.

    ஆனால் இங்கு ஏரி, குளங்கள் தூர் வாரப்படாமல் உள்ளன. பல ஏரிகள், குளங்களின் மீது வீட்டுமனைகள் கட்டப்பட்டு உள்ளன. இதனால்தான் புயல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    தற்போது புயல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு உணவு, குழந்தைகளுக்கு பால் போன்றவை கிடைக்க வில்லை. விவசாயம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.

    ஆனால் மீட்பு பணி சிறப்பாக இல்லை. எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தும் அரசு புயல் பாதிப்பு மீட்பில் கவனம் செலுத்தவில்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மூலம் மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது.

    கேரளாவில் புயல் மீட்பு பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எங்கள் கட்சி சார்பில் புயல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கத்தான் நான் அங்கு செல்கிறேன்.

    புயல் பாதிப்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு மற்றும் வீட்டில் ஒருவருக்கு வேலையை அரசு வழங்க வேண்டும். மீனவர்களுக்கு கூடுதல் இழப்பீடு அளிக்க வேண்டும்.

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் மட்டுமல்ல இன்னும் பல நடிகர்கள் போட்டியிடலாம். இது நடிகர் சங்க தேர்தல் அல்ல. தொகுதி இடைத் தேர்தல்.

    முன்னாள் முதல்வர் தொகுதியான ஆர்.கே. நகரில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. டெங்கு, மலேரியாவால் அங்கு பலரும் பாதிக்கப்பட் டுள்ளனர்.

    நீட் தேர்வு பயிற்சிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க போதுமான பதிவு மையம் தமிழகத்தில் இல்லை. எனவே கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் நீட் தேர்வுக்காக சிறந்த பயிற்சியை தமிழக அரசு வழங்க வில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×