search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகரில் தி.மு.க.வுக்கு ஆதரவு: வைகோ முடிவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
    X

    ஆர்.கே.நகரில் தி.மு.க.வுக்கு ஆதரவு: வைகோ முடிவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தருகின்ற வைகோவின் முடிவை மு.க.ஸ்டாலின் மனப்பூர்வமாக வரவேற்றார்.

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் எல்லா தரப்பினரும், பாதிக்கப்படுவதுடன் பொருளாதாரமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைக்கும் அடிமைத்தனம் இந்த ஆட்சியில் நடக்கிறது. ஒட்டு மொத்த மக்களின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து குறிப்பாக ஆளும் கட்சியை வீழ்த்த வேண்டும். பாடம் புகட்ட வேண்டும் என்ற நல்ல உணர்வுடன் இன்று பல கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவு தருகிறது.

    அந்த நிலையிலே இப்போது தி.மு.க. வேட்பாளருக்கு ம.தி.மு.க.வும் ஆதரவு தருவதாக வைகோ தெளிவாக சொல்லி உள்ளார்.

    தமிழகத்தின் ஆபத்து நீக்கப்படுவதற்கு எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்தால்தான் அதில் வெற்றி காணமுடியும் என்ற உணர்வோடு தி.மு.க.வுக்கு ஆதரவு தர போகிறோம் என்று ம.தி.மு.க. உயர்நிலை கூட்டத்தில் எடுத்த முடிவை தி.மு.க. சார்பில் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு அனைத்து கட்சிகளும் ஒருங்கிணையும் நேரத்தில் ம.தி.மு.க.வும் தன் பங்கை செலுத்த முன் வந்திருப்பது உள்ளபடியே பாராட்டக் கூடிய ஒன்றாகும். அதற்காக வரவேற்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

    கே:- இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமா?

    ப:- இது ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்காக ஏற்பட்டுள்ள கூட்டணியாகும். அந்த அடிப்படையில்தான் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தல் வரும்போது அப்போது பேசி முடிவு செய்யப்படும்.

    கே:- நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளாரே?

    ப:- வாக்குரிமை பெற்றிருக்க கூடிய யாராக இருந்தாலும் தேர்தலில் நிற்பதற்கு உரிமை உண்டு என்பது தான் எனது கருத்து.

    கே:- புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட எப்போது செல்கிறீர்கள்.

    ப:- எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் இன்று நான் கன்னியாகுமரிக்கு செல்கிறேன். அங்கு பாதிக்கப்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்ல செல்கிறேன்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆடம்பர வளைவுகள், கட்-அவுட் வைத்து மக்கள் வரிப்பணத்தை பாழாக்க கூடிய வகையில் கோவையில் அரசு விழா நடத்தி வருகிறார்.

    இந்த நேரத்தில் அதை ரத்து செய்து விட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×