search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களும் அதே இடத்தில் இயங்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
    X

    3 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களும் அதே இடத்தில் இயங்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    தமிழகத்தில் இயங்கி வரும் 3 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களும் அதே இடத்தில் இயங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் திருச்சி மாவட்டம், போதாவூர் கிராமத்தில் வாழை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இங்கு உலகம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட வாழை ரகங்களின் விதைகள் பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சகம் திருச்சி மாவட்டத்தில் உள்ள வாழை ஆராய்ச்சி மையத்தை மூடிவிட்டு மற்ற ஆராய்ச்சி மையத்தோடு இணைக்க முயற்சிப்பதால் வாழை விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

    அதேபோல், சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு கழகம், கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றையும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுடன் இணைக்க முயற்சிப்பது ஏற்புடையதல்ல.



    எனவே, தமிழகத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் மிக முக்கியத்துவம் வாய்ந்த உலகப்புகழ் பெற்ற தேசிய நிறுவனங்களான வாழை ஆராய்ச்சி மையம், உவர்நீர் மீன்வளர்ப்பு கழகம், கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை தொடர்ந்து அதே இடங்களிலேயே இயக்கப்பட வேண்டும் என்றும் எக்காரணத்திற்காகவும் அந்நிறுவனங்களை வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லவோ, வேறு நிறுவனங்களுடன் இணைக்கவோ முயற்சிக்க கூடாது என்றும் மத்திய பா.ஜ.க. அரசை த.மா.கா. வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×