search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோதனையின்போது ஜெயலலிதா வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது: வருமான வரி அதிகாரி தகவல்
    X

    சோதனையின்போது ஜெயலலிதா வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது: வருமான வரி அதிகாரி தகவல்

    சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சோதனை நடத்தினார்கள்.

    186 இடங்களில் நடந்த அந்த சோதனையில் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    அந்த ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆவணங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை கடத்தி செல்ல சிலர் முயற்சி செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 18-ந்தேதி அதிகாரிகள் போயஸ் கார்டன் இல்லத்துக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


    அங்குள்ள சசிகலா அறையிலும், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றம் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அவர்களது அறைகளில் இருந்து பென் டிரைவ்கள், லேப்டாப்புகள், கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த பென்டிரைவ் மற்றும் லேப்டாப்புகளில் என்னென்ன பதிவு ஆகி இருக்கிறது என்பது பற்றி அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக தீவிர ஆய்வு செய்து வந்தனர். அந்த ஆய்வு முடிவில் என்னென்ன தகவல்கள் கிடைத்துள்ளது என்பது பற்றி வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா வீட்டுக்குள் நாங்கள் எதை எதிர்பார்த்து சென்றேமோ அது கிடைத்துவிட்டது. நாங்கள் நடத்திய சோதனை சரியான நேரத்தில் நடத்தப்பட்டதாகும். அதற்கு பலன் கிடைத்துள்ளது.

    லேப்டாப் மற்றும் பென் டிரைவ்களில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே நாங்கள் நடத்திய சோதனையில் போலி நிறுவனங்கள் பற்றி தெரிய வந்திருந்தது. அந்த போலி நிறுவனங்கள் பற்றி உறுதிப்படுத்தும் வகையில் ஜெயலலிதா வீட்டில் இருந்து ஆவணங்கள் கிடைத்துள்ளன.

    இதுவரை கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. அவர்களது வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் பற்றி தகவல் தெரிவிக்க கேட்டுள்ளோம்.

    அவர்கள் தாமாக முன் வந்து உண்மையை சொல்லாவிட்டால் அவர்கள் மீது கருப்பு பணம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளிநாட்டு வங்கி கணக்குகள், முதலீடுகள் தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணைக்கும் நாங்கள் பரிந்துரை செய்வோம்.

    ஜெயலலிதா வீட்டில் நாங்கள் ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தவில்லை. அதுபோல கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களாக்களிலும் நாங்கள் சோதனை நடத்தவில்லை.

    கொடநாடு எஸ்டேட் மானேஜர் நடராஜனிடம் விசாரணை மட்டுமே நடத்தினோம்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
    Next Story
    ×