search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நினைவு நாளை அரசு கடைபிடிக்க தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு
    X

    ஜெயலலிதா நினைவு நாளை அரசு கடைபிடிக்க தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் முறையீட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சிவஞானம், சுந்தர் ஆகியோர் வழக்குகளை இன்று விசாரிக்க தொடங்கினார்கள்.

    அப்போது வக்கீல் துரைசாமி ஆஜராகி, ‘தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி இரவு இறந்ததாக அரசு அறிவித்தது. மறுநாள் அவரது உடல் மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

    ஆனால் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகம் உள்ளது. இரவு 11.30 மணிக்கு அவர் இறந்ததாக அரசும், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமும் கூறினாலும், அடுத்த சில மணி நேரத்தில் அவரது உடல் பதப்படுத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில் எடுத்து வரப்பட்டது. இதில் பல சர்ச்சைகள் உள்ளன. உடலை பதப்படுத்துவதற்கு பல மணி நேரம் ஆகும்.


    இதுபோல சில நிமிடங்களில் உடலை பதப்படுத்த முடியாது. எனவே ஜெயலலிதா உண்மையில் மரணமடைந்த தேதி எது? எத்தனை மணிக்கு அவர் உயிர் பிரிந்தது? என்பது யாருக்கும் தெரியாது.

    ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்தும் விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்த பின்னர்தான், ஜெயலலிதா எப்போது இறந்தார்? அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளியாகும். எனவே ஜெயலலிதா எப்போது இறந்தார்? என்பதில் பல சந்தேகங்கள் உள்ளதால், டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை கடைபிடிக்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளேன். இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘’வழக்கை இன்றே அவசரமாக விசாரணைக்கு எடுக்க முடியாது. வழக்கை தாக்கல் செய்தால், வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்’’ என்று கூறினர்.
    Next Story
    ×