search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுலா வந்துள்ள வெளிமாநில மாணவர்களை கவர்னர் கிரண்பேடி வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு அழைத்து வந்த காட்சி.
    X
    சுற்றுலா வந்துள்ள வெளிமாநில மாணவர்களை கவர்னர் கிரண்பேடி வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு அழைத்து வந்த காட்சி.

    இரவு நேரத்தில் தொடர்ந்து ரோந்து செல்வேன்: கவர்னர் கிரண்பேடி திட்டவட்டம்

    பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து தெரிந்து கொள்ள இரவு நேரங்களில் ரோந்து செல்வேன் என புதுவை கவர்னர் கிரண்பேடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    வார இறுதி நாட்களில் புதுவை கவர்னர் கிரண்பேடி பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்வதும், சுத்தம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

    புதுவை வேல்ராம்பட்டு ஏரியை கவர்னர் கிரண் பேடி சுத்தம் செய்து வேலி அமைத்து சீரமைத்துள்ளார். சமீபத்தில் பெய்த மழையால் ஏரியில் நீர் நிரம்பி அழகுற காட்சியளிக்கிறது.

    இந்த நிலையில் இன்று புதுவைக்கு யுவா தொண்டு நிறுவனம் மூலம் சுற்றுலா வந்துள்ள பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை அழைத்து கொண்டு கவர்னர் கிரண் பேடி வேல்ராம்பட்டு ஏரிக்கு வந்தார். அங்கு மாணவர்களோடு ஏரியை சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டார்.

    மேலும் மரக்கன்றுகளை பராமரித்து, ஏரியை தொடர்ந்து சுகாதாரமாக வைத்திருக்கும்படி அப்பகுதி மக்களை கவர்னர் கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுமையான புதுவையை உருவாக்குவதே எனது நோக்கம். அதன் அடிப்படையில் தொண்டு அமைப்பு மற்றும் மாணவர்களை கொண்டு வேல்ராம்பட்டு ஏரிக்கரையை சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

    நான் ஆய்வுக்கு செல்லும் போது காவல்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவித்து விட்டுத்தான் செல்கிறேன். நான் சொல்லவில்லை என்றால் நான் ஆய்வு செய்ய செல்லும் இடங்களுக்கு காவல்துறை மற்றும் அதிகாரிகள் எப்படி வருகிறார்கள்?

    இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து தெரிந்து கொள்ள மக்களோடு மக்களாக சென்றால்தான் அறிய முடியும், கவர்னராக சென்றால் மக்களின் கருத்துகளையும், உண்மை நிலவரத்தையும் அறிய முடியாது.

    எனவேதான் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். இனியும் இந்த பணி தொடரும். நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அடுத்த வாரம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கடந்த 23-ந்தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, கவர்னர் கிரண்பேடி இரவு நேரங்களில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் புதுவை நகரை வலம் வருகிறார். போலீசாருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் விதிகளை மீறும் கவர்னருக்கு உரிய பாதுகாப்பு எப்படி அளிக்க முடியும்? என்று நாராயணசாமி பேசினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் கிரண் பேடி இரவு நேரத்தில் ரோந்து செல்லும் பணியை தொடருவேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×