search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
    X

    உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் உடல் உறுப்பு தான வார விழா நடந்தது. இந்த விழாவில் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் உடல் உறுப்பு தான வார விழா நடந்தது.

    விழாவில் உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சுகாதாரக் குறியீடுகளில் ஐக்கிய நாடுகளின் மில்லினியம் வளர்ச்சி இலக்குகளையும், தேசிய இலக்குகளையும் அடைவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

    அனைத்து மக்களுக்கும் தரமான சுகாதார சேவை கிடைக்கும் நோக்கத்துடன், பல முன்னோடித் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிக அளவிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது.

    இந்த திட்டம் துவக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1056 இறந்த கொடையாளர்களிடமிருந்து 5933 முக்கிய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தி மறு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.



    தமிழ்நாட்டில் சிறுநீரகம், இருதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இருதய வால்வுகள் போன்ற மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய 70 மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற் கொள்வதில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நாட்டிலேயே முதல் மாநிலத்திற்கான தேசிய விருதுகளை தமிழ்நாடு வென்றுள்ளது.

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எந்த செலவும் இன்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது தவிர, அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    இதற்காக ஏழை எளிய மக்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 35 லட்சம் ரூபாய் வரை உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக அரசு நிதி உதவி வழங்குகிறது. இந்தத் தொகை, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் வழங்கப்படாத அளவிற்கு மிக அதிகமான தொகையாகும்.

    உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்படும் விலை அதிகமான இம்யுனோ சப்ரசிவ் மருந்துகள் கூட கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.

    மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் செயற்கை சுவாசக் கருவி மூலமாக இயங்குவதால், இதயத்தின் செயல்பாடு திடீரென நின்று விட்டால் எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் தானாகவே நின்றுவிடும்.

    எனவே மூளைச்சாவு அடைந்தவரின் உறவினர்கள் அதை உறுதி செய்து கொண்டு, ஒரு விநாடி கூட தாமதிக்காமல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து நல்லதொரு முடிவினை எடுக்க வேண்டும். மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம், இதய வால்வு, ரத்தக்குழாய், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், தோல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் மூலம் அதிகபட்சம் 8 பேருக்கு வாழ்வளிக்க முடியும்.

    இத்திட்டத்தின் முழு பயனும் மக்களுக்கு தகுந்த நேரத்தில் சென்றடையும் பொருட்டு உருவாக்கப்பட்ட டிரான்ஸ்டான் அமைப்பு இதற்கென தனியாக ஒரு இணைய வலைவரிசை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த இணைய வலை வரிசை மூலம் உடல் உறுப்பு செயல் இழந்தவர்கள், அவர்களுக்கு மாற்று உறுப்பு தேவை எனில் அவர்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.



    நாம் மானிடப் பிறப்பு எடுத்ததன் பயன் மற்றவர்களுக்கு உதவுவதே ஆகும். எல்லோரும் கொடையாளிகள் ஆகி விட்டால், இப்பூவுலகமே சொர்க்க லோகம் ஆகிவிடும்.

    இக்கூற்றுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் செயல்பட்டு 1056 மூளை சாவு அடைந்த தங்கள் உறவினர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்து, மற்றவர்களின் உயிர்களை காப்பாற்ற காரணமாக இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அரசின் சார்பாகவும், எனது சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் விஜய பாஸ்கர் உள்பட அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×