search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய காற்றழுத்தம் - திங்கட்கிழமை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு
    X

    புதிய காற்றழுத்தம் - திங்கட்கிழமை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு

    அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார்.
    சென்னை:

    வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.

    இந்த மாத தொடக்கத்தில் இலங்கை அருகே உருவான மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

    சென்னையில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து 3 நாட்கள் இடைவிடாமல் பலத்த மழை கொட்டியது.

    ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 3 நாளில் பெய்ததால் சென்னை நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை குடிநீர் ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

    மழை ஓய்ந்ததைத் தொடர்ந்து சென்னை மற்றும் வட மாவட்டங்களில் ஒரு வாரமாக வெயில் அடிக்கிறது. தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அந்தப் பகுதி முழுவதும் பரவி மேலடுக்கு சுழற்சியாக நீடிக்கிறது.

    இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென் மேற்கு வங்க கடல் (தமிழகம் கடலோரம்) மற்றும் அதனை யொட்டியுள்ள பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக 26-ந் தேதிக்கு பின்பு திங்கட்கிழமையில் இருந்து மீண்டும் தமிழகத்தில் பலத்த மழையுடன் பருவ மழை தீவிரம் அடையும் வாய்ப்பு உள்ளது.

    இதுபற்றி சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரனிடம் கேட்ட போது நாளைக்குப்பிறகே காற்றழுத்த தாழ்வு பகுதி பற்றிய தெளிவான நிலை தெரியவரும். அதன் நகர்வு குறித்தும் பருவ நிலைகள் குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

    இப்போதைக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் பலத்த மழை பெய்யும். இந்த வார கடைசியில் பருவ மழை தீவிரம் அடையும், ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

    தமிழ்நாட்டில் இந்த கால கட்டத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய 32.1 சென்டி மீட்டர் மழை அளவுக்கு பதிலாக 26.4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் கூறினார்.

    Next Story
    ×