search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபைக்குள் நுழையும் முடிவை கைவிட்ட புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள்
    X

    சட்டசபைக்குள் நுழையும் முடிவை கைவிட்ட புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள்

    சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சட்டசபைக்குள் தடையை மீறி நுழைவது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசு பரிந்துரை இல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நேரடியாக பா.ஜனதாவை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டனர்.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோருக்கு கவர்னர் கிரண்பேடி இரவோடு இரவாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால் தங்களை எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரித்து சட்டசபையில் இருக்கை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கடிதம் அளித்தனர்.

    ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் அவர்களை எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க மறுத்துவிட்டார். மேலும் சலுகைகளை மறுத்து சட்டசபை செயலகம் மூலம் பதில் கடிதம் அனுப்பினார். இந்நிலையில் இன்று சட்டசபையில் குளிர்கால கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் அங்கீகரிக்காவிட்டாலும் தாங்கள் பங்கேற்கப்போவதாக பா.ஜனதாவை சேர்ந்த 3 பேரும் அறிவித்திருந்தனர்.

    இதனால் சட்டமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சட்டமன்றத்தின் நாலாபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சட்டமன்றத்தின் இருபக்க நுழைவு வாயிலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். சட்டமன்ற ஊழியர்களாக இருந்தாலும், அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சட்டமன்றத்தின் பின்புறம் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.



    இந்நிலையில் சட்டமன்றத்திற்கு வருவதாக அறிவித்திருந்த பா.ஜனதாவினர் கூட்டம் தொடங்கிய பிறகும் வரவில்லை. அவர்கள் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் நேற்றைய தினம் நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், சட்டமன்ற கூட்டத்தில் நியமன எம்.எல்.ஏ. தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    அதோடு வழக்கு நிலுவையில் இருக்கும்போது சட்டசபைக்குள் நுழைவது சட்டரீதியிலான சிக்கலை ஏற்படுத்தும் என பா.ஜனதாவினர் கருதினர். மேலும் சட்ட ஒழுங்கையும் பாதித்து பிரச்சினைகள் ஏற்படும் என கருதினர். இதனால் சட்டசபைக்குள் நுழையும் முடிவை கைவிட்டனர்.

    இதுகுறித்து பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கூறியதாவது:-

    சென்னை ஐகோர்ட்டில் நியமன எம்.எல்.ஏ. தொடர்பான வழக்கு எங்களுக்கு சாதகமாக அமையும் வகையில் உள்ளது. இந்நேரத்தில் சட்டமன்றத்திற்குள் நாங்கள் நுழைவது சட்ட ஒழுங்கில் சிக்கலை ஏற்படுத்தலாம். காங்கிரசார் திட்டமிட்டு சட்ட ஒழுங்கை சிக்கலாக்கலாம். இதையெல்லாம் கருத்தில்கொண்டே சட்டசபைக்குள் நுழையும் முடிவை கைவிட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×