search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
    X

    சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

    கொச்சியில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொச்சியில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த முஸ்தாக் (வயது 49), பஷீர் ராவுத்தர் (45) ஆகியோர் வந்தனர். இவர்களின் உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது முஸ்தாக்கின் உடைமைகளில் 7 தங்க கட்டிகள் இருந்தன. இதையடுத்து ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 820 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல், பஷீர்ராவுத்தர் வைத்திருந்த பைகளில் 4 தங்க கட்டிகள் இருந்தன. ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

    துபாயில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தின் இருக்கையில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததாகவும், அங்கிருந்து உள்நாட்டு விமானம் வந்தபோது அவற்றில் இருவரும் ஏறி தங்கத்தை கடத்தி வந்து இருப்பதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளையும் சுங்க இலாகா அதிகாரிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    இதேபோல், கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது (34) என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கச்சங்கிலி மற்றும் மோதிரத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முஸ்தாக்கை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×