search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பராமரிப்பின்றி இயக்குவதால் அரசு பஸ்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1200 கோடி நஷ்டம்: தொ.மு.ச. பொருளாளர்
    X

    பராமரிப்பின்றி இயக்குவதால் அரசு பஸ்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1200 கோடி நஷ்டம்: தொ.மு.ச. பொருளாளர்

    அரசு பஸ்கள் முறையாக பாராமரிக்காமல் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து ஆண்டுக்கு ரூ.1200 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்று தொ.மு.ச. பொருளாளர் பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் இயக்கப்படும் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்களில் பயணிகள் பயணம் செய்ய முடியாத அவல நிலை இருந்து வருகிறது.

    இந்த போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து போக்குவரத்து கழகத்தில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச.) பொருளாளர் நடராஜனிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்கள் எத்தனை உள்ளன? இவற்றில் எவ்வளவு பேர் பணியாற்றுகின்றனர்?

    பதில்:- தமிழகத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, நெல்லை, சேலம் மற்றும் கோவை ஆகிய 8 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

    கேள்வி:- சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எவ்வளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன?

    பதில்:- சென்னை மாநகர பகுதியில் 3,500 பேருந்துகளும், மாவட்ட டவுன் மற்றும் புறநகர் பகுதிகளில் தலா 6 ஆயிரத்து 700, மலைப்பகுதிகளில் 530 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    கேள்வி:- இயக்கப்படும் அத்தனை வழித்தடங்களிலும் லாபகரமாக பஸ்கள் இயக்கப்படுகின்றனவா?



    பதில்:- 23 ஆயிரத்து 78 பஸ்களில், மலைப்பிரதேசம் உள்பட அனைத்து பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளில் 10 ஆயிரத்து 800 பஸ்கள் நஷ்டத்தில் இயக்கப்படுகின்றன. குறிப்பாக வரவு செலவுகளை கணக்கிடுகையில் 1 கிலோ மீட்டர் தூரம் இயக்கப்படுவதன் மூலம் 8 ரூபாய் 56 பைசா நஷ்டம் ஏற்படுகிறது.

    கேள்வி:- டீசலுக்கு அரசு மானியம் அளித்து வருகிறதே?

    பதில்:- தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 16 ஆயிரம் லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,464 கோடி டீசல் மானியம் வழங்க வேண்டும். அதற்கான அரசு உத்தரவும் போடப்பட்டுள்ளது. ஆனால் அரசு கடந்த ஆண்டு ரூ.800 கோடி மட்டுமே டீசல் மானியம் வழங்கி உள்ளது. நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இவ்வாறு சென்றால் போக்குவரத்து கழகங்களின் நிலைமை மோசமடையும்.

    கேள்வி:- டீசல் தவிர போக்குவரத்து கழகத்துக்கு ஏற்படும் பெரிய செலவினங்கள் எவை?

    பதில்:- புதிய பஸ்கள் வட்டார போக்குவரத்து கழகங்களில் பதிவு செய்யும் போது பதிவு கட்டணம், சாலை வரி, எப்.சி. காண்பிக்கும் போது செலுத்த வேண்டிய கட்டணம், காலம் கடந்தால் அபராதம், விபத்தில் சிக்கும் பஸ்களை சரி செய்து மீண்டும் இயக்குவதற்கான கட்டணம், சுங்க வரிகள் செலுத்த வேண்டி உள்ளது. இவற்றுக்கு காலம் கடந்து அரசு அளிக்கும் நிதி வட்டிக்கே போய்விடுகிறது.

    கேள்வி:- அரசு சேவை துறை என்பதால் அதில் லாப, நஷ்ட கணக்குகள் போடுவது சரியா?

    பதில்:- போக்குவரத்து கழகங்கள் இயற்கையாகவே மரணம் அடையட்டும் என்ற நிலைக்கு அரசு கொண்டு செல்கிறது. போக்குவரத்து கழகங்களை வணிக துறையாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆனால் அரசு சேவை துறையாக தான் எங்களை கருதுகிறது. அரசு கொள்கையை ஏற்று பஸ்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் நஷ்டத்தை அரசு தருவதில்லை.

    கேள்வி:- போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த அரசு எடுத்து வரும் அணுகுமுறை என்ன?

    பதில்:- அரசின் தவறான அணுகுமுறையால் நாளுக்கு நாள் பஸ்கள் இயக்கம் சீர்குலைந்து வருகிறது. குறிப்பாக 2010-2011-ம் ஆண்டு சென்னையில் மட்டும் 1 நாளைக்கு 1 பேருந்தில் 1,595 பேர் பயணம் செய்துள்ளனர். ஆனால் இன்று போதிய பராமரிப்பில்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை 1,270 ஆக குறைந்துள்ளது.

    அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு ஒரு பஸ்சில் சராசரியாக 300 வீதம் என்றால் மாநகரில் இயக்கப்படும் 3 ஆயிரத்து 500 பஸ்களை கணக்கிட்டால் சென்னையில் மட்டும் 7 லட்சம் பயணிகளும், 8 போக்குவரத்து கழகங்களிலும் சராசரியாக 25 லட்சம் பயணிகளுமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. 2010-2011-ம் ஆண்டில் 2 கோடியே 4 லட்சம் பயணிகள் பயணம் செய்த அரசு பஸ்களில் தற்போது 1 கோடியே 79 லட்சம் பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர்.

    கேள்வி:- பயணிகள் குறைவால் போக்குவரத்து கழகத்துக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது?

    பதில்:- சராசரியாக ஒரு பயணி மூலம் ஒரு நாளைக்கு ரூ.11.50 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி 25 லட்சம் பயணிகளை கணக்கிட்டால் ரூ.2.5 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு கணக்கிட்டால் சராசரியாக ரூ.984 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டுகளில் 87 லட்சம் கிலோ மீட்டர் இயக்கப்பட்டு, 2 கோடியே 4 லட்சம் பயணிகள் கையாளப்பட்டனர். ஆனால் தற்போது 94 லட்சம் கிலோ மீட்டர் இயக்கி 1 கோடியே 79 லட்சம் பயணிகள் மட்டுமே கையாளப்படுகின்றனர். பல்வேறு சலுகைகள் அளிப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ.1,200 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

    இதுக்கு முக்கிய காரணமே பஸ்கள் முறையாக பராமரிக்காதது தான். இதுதவிர ஊழல் ஒரு புறம் போக்குவரத்து கழகங்களை நலிவடைய செய்கிறது. இவற்றை களைந்தாலே போக்குவரத்து கழகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×