search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே 1 வருடமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
    X

    திண்டுக்கல் அருகே 1 வருடமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

    திண்டுக்கல் அருகே கடந்த ஒரு வருடமாக சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீராத கதையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வறட்சியின் காரணமாக பொதுமக்கள் குடிநீர்கேட்டு நகர் பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

    தற்போது மழை பெய்துள்ளதால் நகர் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே பெரிய கோட்டை கோவுகவுண்டன்பட்டி பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வருடமாகவே இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் சீராக செய்யப்படுவதில்லை. முதலில் வறட்சி என கூறினர். அதன்பின்பு மழை பெய்தபோதும் குடிநீர் வினியோகம் சீர்செய்யப்படவில்லை.

    5 மோட்டார்கள் இருந்த போதும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. தண்ணீர் திறப்பவரும் முறையாக செயல்படாததால் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை திண்டுக்கல்- திருமலைக்கேணி சாலையில் ஒத்தக்கடை பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மறியலால் அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×