search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை புதுவை சட்டசபை கூட்டம்: நியமன எம்.எல்.ஏ.க்கள் தடையை மீறி நுழைய திட்டம்
    X

    நாளை புதுவை சட்டசபை கூட்டம்: நியமன எம்.எல்.ஏ.க்கள் தடையை மீறி நுழைய திட்டம்

    புதுவை சட்டசபை கூட்டம் நாளை கூடுகிறது. நியமன எம்.எல்.ஏ.க்கள் தடையை மீறி சட்டசபையில் நுழைந்துவிடாமல் தடுப்பதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 16-ந்தேதி முடிவடைந்தது.

    சட்டசபையை 6 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்பது விதிமுறையாகும். ஏற்கனவே சட்டசபை கூட்டம் முடிந்து 6 மாதம் ஆவதால் நாளை(வியாழக்கிழமை) புதுவை சட்டமன்றம் கூடுகிறது. காலை 10.45 மணிக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.

    கூட்டத்தில் விலங்குகள் வதை தடுப்பு சட்ட திருத்த முன்வரைவு, நீதிமன்ற கட்டணம், வழக்கு மதிப்பீட்டு சட்ட திருத்த முன்வரைவு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு விவாதம் நடத்தப்படுகிறது. பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட இருக்கிறது.

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் பா.ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்ததால் அதற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இது சம்மந்தமாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் தங்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரித்து சட்டசபையில் அறை ஒதுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் அவர்களை அங்கீகரிக்க சபாநாயகர் மறுத்து விட்டார்.

    நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் முறைப்படி நியமிக்கப்படாததால் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சட்டசபை செயலர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் நாளை சட்டசபை கூட்டம் நடப்பதால் அதில் பங்கேற்பதற்கு 3 எம்.எல்.ஏ.க்களும் திட்டமிட்டனர். அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால் சட்டசபையில் நுழைய முடியாது.

    ஆனால் அதையும் மீறி சட்டசபைக்குள் நுழைவோம் என்று 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் அறிவித்தனர். மேலும் சட்டசபைக்குள் அனுமதிக்க உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டிலும் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    நாளை சட்டசபை கூட்டம் நடக்கும்போது திட்டமிட்டபடி அவர்கள் உள்ளே நுழைய உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் அவர்களுக்கு உதவி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்கள் சட்டசபையில் நுழைந்துவிடாமல் தடுப்பதற்கு சட்டசபை செயலகம் மூலம் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    வழக்கமாகவே சட்டமன்றம் கூடும்போது சட்டசபை செயலர் போலீஸ் டி.ஜி.பி., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு பாதுகாப்பு கோரி கடிதம் அனுப்புவார். தற்போது நியமன எம்.எல்.ஏ.க்கள் நுழைவதை தடுக்கும் விதத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரியுள்ளனர்.

    மேலும் இன்று மாலை சட்டமன்ற பாதுகாப்பு குறித்து சபாநாயகர் வைத்திலிங்கம் போலீசாருடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். நியமன எம்.எல்.ஏ.க்கள் என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் காரில் ஏறி உள்ளே வருவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவ்வாறு நுழைந்துவிடாமல் தடுப்பதற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

    சட்டசபை கூட்டம் நடக்கும்போது எம்.எல்.ஏ.க்களின் கார்களை சட்டசபை வளாகத்துக்குள் அனுமதிப்பது வழக்கம். ஆனால் நியமன எம்.எல்.ஏ.க்கள் மற்ற எம்.எல்.ஏ.க்களின் காரில் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக நாளை எம்.எல்.ஏ.க்களின் கார்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது.
    Next Story
    ×