search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே வியாபாரிகளிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த ஆசாமி
    X

    தேனி அருகே வியாபாரிகளிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த ஆசாமி

    தேனி அருகே பல்வேறு வியாபாரிகளிடம் ரூ.90 லட்சம் வரை மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் போடி ஆர்.ஐ. அலுவலக ரோட்டில் பெங்களூர் சுதா நகரைச் சேர்ந்த கவுதம் புகாரி என்பவர் ஜவுளி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகை செல்வம் என்பவரிடம் இருந்து ரூ.17 லட்சத்து 57 ஆயிரத்து 712க்கு ஆயத்த ஆடைகள் வாங்கினார்.

    அதற்கு ஈடாக 2 காசோலைகளை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்டு கார்த்திகை செல்வம் வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இது குறித்து கவுதம் புகாரியிடம் கேட்க முயன்ற போது அவர் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

    அவர் மோசடி பேர்வழி என தெரிய வரவே இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில் பல வியாபாரிகளிடம் இவர் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. வைரமணி என்ற ஜவுளி வியாபாரியிடம் ரூ.11 லட்சத்து 28 ஆயிரம், தென்றல் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் அய்யப்பன் என்பவரிடம் ரூ.21 லட்சத்து 11 ஆயிரம், போடி திருமலாபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் ரூ.23 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் பொருட்களை வாங்கிக் கொண்டு அதற்கு ஈடாக அவர் அளித்த அனைத்து காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

    அவர் இது போல் ரூ.90 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வரவே போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    Next Story
    ×