search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளில்லா விமானம் மூலம் நகர கட்டமைப்பை வரைபடமாக தயாரிக்கும் பணி: எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
    X

    ஆளில்லா விமானம் மூலம் நகர கட்டமைப்பை வரைபடமாக தயாரிக்கும் பணி: எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

    ஆளில்லா விமானம் மூலம் அனைத்து கட்டிடங்கள், அனைத்து துறைகளின் சேவை பயன்பாட்டுப் பொருட்களை புவிசார் தகவல் அமைப்பு உதவியுடன் வரைபடமாக தயாரிக்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    அமைச்சர் எஸ்.பி.வேலு மணி பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆளில்லா வானூர்தி மூலம் சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணியினை இன்று அடையாறு மண்டலம், ராஜா அண்ணா மலைபுரத்தில் துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே நான்காவது பெரிய உள்ளாட்சி அமைப்பான பெருநகர சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 75 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட மாநகராட்சியாகும்.

    உலக வங்கியின் ரூ.6.43 கோடி நிதியுதவியுடன் 2 ஆளில்லா வானூர்தி மூலம் அனைத்து கட்டிடங்கள், சாலைகள் மற்றும் சாலைகளில் அமைந்துள்ள அனைத்து துறைகளின் சேவை பயன்பாட்டுப் பொருட்களை புவிசார் தகவல் அமைப்பு உதவியுடன் வரைபடமாக தயாரிக்கும் பணி மத்திய அரசின் வானூர்தி துறையின் தலைமை இயக்குநரகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், புலனாய்வு துறை மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகர காவல் துறை அனுமதி பெற்று தமிழ்நாடு நகர்ப்புற உள் கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியை 120 நாட்களில் நிறைவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.


    நவீன தொழில்நுட் பத்தைப் பயன்படுத்தி அனைத்து சொத்துக்கள் மற்றும் சாலைகளின் மேல் அமைந்துள்ள அரசு/சேவை நிறுவனங்கள் அல்லது துறைகளின் பயன்பாட்டுப் பொருட்களை ஒருங்கிணைத்து புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட தமிழக அரசு, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தை திட்ட மேலாண்மை அமைப்பாக நியமித்துள்ளது.

    புவிசார் தகவல் தொகுப்பு விவரங்களை கையாளவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளின் விவரங்களை தினசரி நிலை உயர்த்தும் வகையிலும், இப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஆளில்லா வானூர்தி மூலம் தயாரிக்கப்படவுள்ள புவிசார் தகவல் வரை படத்துடன் நிலை உயர்த்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் மேலாண்மை தகவல் புள்ளி விவரங்கள் இணைக்கப்படும். மேலும், எடுக்கப்படும் படங்கள் இந்திய பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, இசைவு பெற்ற பின்னரே பெருநகர சென்னை மாநகராட்சியால் பயன்படுத்தப்படும்.

    இத்தகவல்களை பாதுகாப்பாக கையாள 24 மணிநேர கண்காணிப்பு கேமரா மற்றும் தடையற்ற மின்வசதி, அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளுடன் கைவிரல் ரேகை பதிவு முறையுடன், செயற் பொறியாளர் நிலையில் உள்ள பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவைகளான திடக்கழிவு மேலாண்மை, சாலை வசதி, தெருவிளக்குகள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்கள் ஆகியவற்றை மேம்படுத்தவும், இதர சேவை துறைகள் வழங்கி வரும் சேவைகளான குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.

    மேலும், புவியியல் தகவல் தொழில்நுட்ப வரை படத்துடன் இணைக்கப்பட்ட புள்ளி விவரங்கள், சென்னை பெருநகர வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு தேவையான முதன்மை பணிகளை திட்டமிடுதல் திட்டங்களை நிறைவேற்றல் மற்றும் கொள்கை முடிவுகள் எடுத்தல் ஆகிய நிர்வாக பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    சொத்துகளுக்கான புவியியல் தகவல் முறையினை உருவாக்குவதன் மூலம், சென்னை மாநகர குடிமக்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பிற அரசு சேவை துறைகள் வழங்கும் சேவைகளின் தரம் உயர்த்தப்படும்.

    சொத்துக்கள் மற்றும் சேவை பயன்பாட்டுப் பொருட்கள் பற்றிய தெளிவான மற்றும் துல்லியமான காட்சிகளை புவியியல் தகவல் முறையில் பெறலாம். உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியால் செலவிடப்படும் செலவினங்கள் முறைப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் அதிகாரிகள் ஹர்மந்தர்சிங், காகர்லா உஷா, தா.கார்த்திகேயன், சென்னை மாவட்ட கலெக்டர் வி.அன்புச்செல்வன், மயிலாப்பூர் ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×