search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தரகர்கள் மூலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கொடிகட்டி பறக்கிறது: நீதிபதி கண்டனம்
    X

    இடைத்தரகர்கள் மூலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கொடிகட்டி பறக்கிறது: நீதிபதி கண்டனம்

    பத்திரபதிவு அலுவலகத்தில் இடைத்தரகர்கள், ஏஜெண்ட்டுகள் என்ற 3-வது நபர்கள் மூலமாக லஞ்சம் கொடிகட்டி பறப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் பத்திரப்பதிவு துறை அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக விளங்குகிறது. முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் போன்றவை பொது மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.

    அரசுக்கு முறையாக செலுத்த வேண்டிய கட்டணம் போக அங்குள்ள அதிகாரிகள், ஊழியர்களுக்கு என தனியாக ஒரு தொகை ஒவ்வொரு பதிவிற்கும் வசூலிக்கப்படுகிறது. இதற்கு ரசீது எதுவும் வழங்கப்படுவது இல்லை.

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் சுற்றிவரும் புரோக்கர்கள் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் தவிர லஞ்சமாக இது பெறப்படுகிறது. இது ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் எழுதப்படாத சட்டமாக உள்ளது. இதே போல வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் (ஆர்.டி.ஓ.) காணப்படுகிறது. ஒரு இடத்தை வாங்கவோ, விற்கவோ பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு பதிவு செய்ய சென்றால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை விட லஞ்சமாக கொடுக்க வேண்டிய தொகை அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள மூதாதையர் சொத்தை பாகப் பிரிவினை செய்து, பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு குடும்பத்தினர் விண்ணப்பம் செய்தனர். இதற்கான முறையான முத்திரைக் கட்டணத்தையும் செலுத்தி விட்டனர்.

    ஆனால் ஓராண்டு ஆகியும் பத்திரப்பதிவு செய்யப்படவில்லை. ஆவணங்களை திருப்பியும் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரனிடம் மனுதாரரின் சார்பில் ஆஜரான வக்கீல் பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சம் பெறுவது தொடர்பான பட்டியலை நீதிபதி முன்பாக தாக்கல் செய்து வாதிட்டார்.



    இதையடுத்து நீதிபதி கிருபாகரன் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறைக்கு அதிரடியாக 10 உத்தரவுகளை பிறப்பித்தார் தான் கேட்ட 10 கேள்விகளுக்கும் 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    நீதிபதி கிருபாகரன் எழுப்பிய 10 கேள்விகள் என்ன? என்பது சாமானிய மக்களையும் சிந்திக்க வைத்துள்ளது.

    தமிழகத்திலேயே ஊழல் அதிகமாக நடைபெறும் துறையாக பத்திரப்பதிவுத் துறை தான் உள்ளது. குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்பதை மனுதாரரின் வக்கீல் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். லஞ்சத்தை தடுக்கத்தான் சி.சி.டி.வி. கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால் அதையும் மீறி இடைத்தரகர்கள், ஏஜெண்ட்டுகள் என்ற 3-வது நபர்கள் மூலமாக லஞ்சம் கொடி கட்டி பறக்கிறது என்று நீதிபதி கூறியுள்ளார். அவர் எழுப்பிய 10 கேள்விகள் வருமாறு:-

    * கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெருகி வரும் லஞ்சத்தை தடுக்கவும், லஞ்சம் வாங்கியவர்கள் மீது என்ன நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

    * ரெய்டு நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு?

    * வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

    * பத்திரப்பதிவு அலுவலகங்களில் மூன்றாவது நபர்களின் தலையீட்டை கட்டுப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

    * பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரப்பதிவு செய்பவர்கள் மட்டும் உள்ளே சென்று வரும் வகைகளில் ஏன் டிஜிட்டல் வாக்கிங் சிஸ்டம் ஏற்படுத்தக் கூடாது?

    * லஞ்ச ஒழிப்பு போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?

    * மனுதாரருக்கு ஒரு வருடமாக ஏன் பத்திரப்பதிவு செய்யவில்லை.

    * பத்திரப்பதிவு பதிவாளர்கள் தங்களின் சொத்து கணக்கை ஒவ்வொரு ஆண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாக்கல் செய்கிறார்களா?

    * லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

    இந்த கேள்விகளுக்கு 3 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×