search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை மேட்டுப்பாளையத்தில் அரசு ஊழியர் மீது வெடிகுண்டு வீச்சு - சிறுமி காயம்
    X

    புதுவை மேட்டுப்பாளையத்தில் அரசு ஊழியர் மீது வெடிகுண்டு வீச்சு - சிறுமி காயம்

    புதுவை அருகே அரசு ஊழியர் மீது வீசிய நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில், அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுமி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் சொக்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் பெருமாள் (வயது 33). இவர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பெருமாள் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றனர். இதனை பெருமாள் தட்டி கேட்டார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் ஆத்திரம் தீராத அந்த வாலிபர்கள் நேற்று மாலை ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் மீண்டும் அங்கு வந்தனர். அப்போது அங்கு வந்த பெருமாளை சரமாரியாக தாக்கினர். அவர்கள் பிடியில் இருந்து பெருமாள் ஓடினார்.

    உடனே அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து பெருமாள் மீது வீசியது. ஆனால், அந்த வெடிகுண்டு பெருமாள் மீது படாமல் ரோட்டில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பெருமாள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    அதே வேளையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த வேலு என்பவரின் மகள் சுவேதாவுக்கு (வயது 11) வெடிகுண்டு சிதறலில் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பொதுமக்கள் திரண்டு வரவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    பின்னர் வெடிகுண்டு வெடித்ததில் காலில் காயம் அடைந்த சிறுமி சுவேதா மற்றும் கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த பெருமாள் ஆகிய இருவருரையும் பொதுமக்கள் மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங், கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக புகார் கூறினர். ரவுடிகள், சமூக விரோதிகள் நடமாட்டத்தால் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், 2 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    Next Story
    ×