search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி நீதிமன்றத்தில் புதிய மனு
    X

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி நீதிமன்றத்தில் புதிய மனு

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த விவகாரத்தில் ஜாமீன் கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி மனு தாக்கல் செய்துள்ளார்.
    சென்னை:

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த விவகாரத்தில் ஜாமீன் கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்வு மையத்துக்குள் ‘புளுடூத்’ எடுத்துச் செல்லவில்லை என்றும், உள்நோக்கத்துடன் தன்னை சிலர் சிக்க வைத்துவிட்டதாகவும் கூறி உள்ளார்.

    சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். பணிக்கான முதன்மை தேர்வில் காப்பி அடித்ததாக நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஐ.பி.எஸ். அதிகாரியான சபீர்கரீம் கைது செய்யப்பட்டார். தேர்வில் காப்பி அடிக்க உதவியாக இருந்ததாக அவரது மனைவி ஜாய்சி, நண்பர் ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இதைதொடர்ந்து சபீர்கரீம் ஜாமீன் கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்ததும் கேரளாவில் நான் நடத்தி வந்த ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை வேறொருவருக்கு விற்று விட்டேன். அந்த மையத்தை வாங்குவதில் சிலரிடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்த உள்நோக்கத்தில் என்னை வேண்டுமென்றே சிலர் சிக்க வைத்துவிட்டனர். தேர்வு மையத்துக்குள் நான் ‘புளுடூத்’ எதுவும் எடுத்துச் செல்லவில்லை.

    செல்போன், புளுடூத் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்கிறார்களா என்று தேர்வு மையத்துக்கு வெளியே பரிசோதனை மேற்கொண்ட பின்பே உள்ளே அனுமதிக்கின்றனர். யாராக இருந்தாலும் பரிசோதனைக்கு பின்பு தான் அனுமதிக்கப்படுவர். இதுபோன்ற சூழ்நிலையில் நான் புளுடூத் எடுத்து சென்றதாக கூறி இருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது.

    மத்திய பணியாளர் தேர்வாணைய விதிகளின்படி ஐ.ஏ.எஸ். தேர்வில் முறைகேடு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் எதிர்காலத்தில் தேர்வு எழுத மட்டுமே தடை விதிக்க முடியும். ஆனால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவறானது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
    Next Story
    ×