search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்: வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
    X

    விவசாயிகள் போராட்டம்: வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

    மதுரை மேலூரில் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்ககோரி விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    மதுரை மேலூரில் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்காமல், நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்ததால் மேலூர் பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். தங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி இன்று காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் ஏராளமான விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தினால் நிலத்தடி நீர் வறண்டு காணப்படுவதால் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு போதிய குடிநீரின்றி சிரமப்படுவதாக தெரிவித்து, மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளுக்கு குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட  கோரியுள்ளனர்.


    எனவே, மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வைகை அணையிலிருந்து கூடுதலாக 900 கன அடி தண்ணீரினை சிறப்பு நிகழ்வாக 21.11.2017 முதல் 27.11.2017 வரை ஏழு நாட்களுக்கு, திருமங்கலம் பிரதான கால்வாயின் வாயிலாக 200 கன அடி அளவும், பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கன அடி அளவும் தண்ணீர்  வழங்குவதற்கு ஆணையிடப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×