search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை பறிப்பு: பொதுமக்கள் பீதி
    X

    காரைக்குடியில் ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை பறிப்பு: பொதுமக்கள் பீதி

    காரைக்குடியில் ஒரே நாளில் 3 பெண்களிடம் மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி அகிலா தேவி (வயது49). இவர் நேற்று வீட்டருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அகிலாதேவியை பின் தொடர்ந்தார்.

    ஆள்நடமாட்டம் குறைந்த இடத்தில் வந்தபோது மர்ம நபர் அகிலாதேவியை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினான்.

    காரைக்குடி கழனி வாசலை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி பத்மினி (39). இவர்களது மகன் வெளியூரில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    நேற்று மகனை பஸ் நிலையத்தில் விட்டு விட்டு பத்மினி மொபட்டில் வீடு திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பத்மினி கழுத்தில் கிடந்த 8½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    காரைக்குடி லெட்சுமண நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மனோன்மணி (37). இவர் செக்காலை ரோட்டில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார்.

    மனோன்மணி ரெயில்வே பீடர் ரோட்டில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார்.

    உடனே அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதைகேட்டு அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து வந்தனர். இதை பார்த்த கொள்ளையன் அங்கிருந்து தப்பினான். இந்த பதட்டத்தில் அவனது செல்போன் தவறி கீழே விழுந்தது. இதை கைப்பற்றிய பொதுமக்கள் அழகப்பாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் பிரேமானந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முத்துக்கருப்பன் மகன் வைரமுத்து (27) நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் காரைக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். ஆனால் இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை.

    காரைக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் சர்வ சதாரணமாக நடந்து வருகின்றன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் யாரும் சிக்கியதாக தெரியவில்லை.

    பொதுமக்கள் நாள் தோறும் பீதியுடனேயே வெளியில் நடமாடி வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் அடுத்தடுத்து 3 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. புகார் செய்தாலும் போலீசார் உடனே கண்டு கொள்வதில்லை. மெத்தனமாக செயல்பட்டு வருவதால் கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக தலையிட்டு கொள்ளை சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×