search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறை சோதனை குறித்த விசாரணையை விரைந்து முடிக்கவேண்டும்: ஜி.கே.வாசன்
    X

    வருமான வரித்துறை சோதனை குறித்த விசாரணையை விரைந்து முடிக்கவேண்டும்: ஜி.கே.வாசன்

    வருமான வரித்துறை சோதனை குறித்த சந்தேகம், விமர்சனத்தை போக்க அதிகாரிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    திருச்சி:

    திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் வருகிற 25-ந்தேதி த.மா.கா. 4-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்காக உழவர் சந்தை மைதானத்தில் பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பந்தல்கால் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் வருகிற 25-ந்தேதி த.மா.கா. 4-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளில் நான் அனைத்து கிராமங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்துள்ளேன். உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களில் த.மா.கா. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வகையில் சிறப்பான வளர்ச்சியை கட்சி பெற்றுள்ளது.

    4-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் எவ்வளவு தொண்டர்கள் குவிவார்கள் என்று எண்ணிக்கையில் கூறமுடியாது. இதற்கு முன்பு இங்கு கூட்டம் நடைபெற்றிருக்கும். அதையெல்லாம் மிஞ்சும் வகையில் மைதானம் நிரம்பி வழியும் வகையில் குவிவார்கள்.

    இப்போது கூட்டணி குறித்து த.மா.கா. எந்த நிலைப்பாட்டையும் எடுக்காது. தேர்தல் வரும்போது பொதுமக்கள், கட்சி தொண்டர்களின் விருப்பம், சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க த.மா.கா. தவறு செய்யவில்லை. தற்போது என்ன நிலையில் உள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எங்களுடன் இருந்தவர்கள் இப்போது தி.முக.வுடன் உள்ளார்கள். இதனால் தி.முக. கூட்டணி வலுவாக உள்ளது என்றும் கூற முடியாது. தி.மு.க.வுடன் தற்போதுள்ள கட்சிகள் கடைபிடிப்பது நட்புறவா? கூட்டணியா? என்று தேர்தல் நேரத்தில்தான் தெரியும். பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைமையை ஏற்று அனைத்து கட்சிகளும் வரவேண்டும் என்று கூறியுள்ளார். அது அவர் விருப்பம்.


    அரசு மக்களை காப்பாற்றும் அரசாக இருக்க வேண்டும். அரசே மக்கள் பணத்தை திருடக்கூடாது என்று நடிகர் கமல் கூறியிருப்பதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. கமல் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தரும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    தமிழகத்திற்கு கவர்னர் தேவையில்லை என்பது திராவிட கட்சிகளின் கொள்கை. அதை அனைத்து கட்சிகளுமே ஏற்க வேண்டும் என்று நினைக்க முடியாது. தற்போதுள்ள நிலையில் கவர்னர் ஆய்வு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. டிசம்பர் மாதம் ஆட்சி கலைப்பு என்பது போன்ற தகவல்களை அரசு தவிர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். மத்திய-மாநில அரசுகள் தமிழக மக்களின் நம்பிக்கையை இழக்கும் வகையில் உள்ளது.

    மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., விவசாய பிரச்சனை போன்றவற்றால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழக அரசு செயல்பாடுகள் மீது மக்களுக்கு திருப்தி இல்லை. மக்கள் பிரச்சனைகள் மீது முழுமையாக கவனம் செலுத்தி பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.

    கடந்த சில நாட்களாக சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீடு வரை நீண்டிருக்கிறது. இந்த சோதனை சந்தேகத்தை போக்குவதற்கும், அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை விமர்சனத்தை போக்கவும் அதிகாரிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். சசிகலாவை காப்பாற்ற ஜெயலலிதா தவறி விட்டார் என்று திவாகரன் கூறியிருப்பதற்கு நாங்கள் கருத்து கூற முடியாது. அவர்களுடன் இருந்தவர்கள் தான் பதில் கூற வேண்டும். ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுத்தால் வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×