search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பியூர் அருகே கழுத்தை அறுத்து விவசாயி கொலை
    X

    நம்பியூர் அருகே கழுத்தை அறுத்து விவசாயி கொலை

    நம்பியூர் அருகே விவசாயியை மர்ம கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவிற்குட்பட்ட செம்மம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி. இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு துரைசாமி (10) உள்பட 2 மகன்கள் உள்ளனர்.

    பழனிச்சாமி தனது தோட்டத்திலேயே வீடு கட்டி மனைவி மற்றும் 2 மகன்களுடன் வாழ்ந்து வந்தார். நேற்று இரவு பழனிச்சாமி தனது மகன் துரைசாமியுடன் வீட்டின் வெளியே திண்ணையில் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் பழனிச்சாமியின் கழுத்தை அறுத்து, தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பழனிச்சாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    அருகில் படுத்திருந்த சிறுவன் துரைசாமி இதை உணர்ந்து எழுந்தான். தந்தை மர்ம நபரால் தாக்கப்படுவதை அறிந்து சத்தம் போட்டு அழுதான்.

    இதை பார்த்த அந்த நபர் சிறுவன் துரைசாமியையும் கொலை செய்ய அவனது தலையில் பயங்கரமாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வெட்டுப்பட்டதில் நிலை குலைந்துபோன சிறுவன் துரைசாமி கட்டிலின் கீழ் பதுங்கி அதிக சத்தம் எழுப்பினான்.

    அவனது அழுகுரல் கேட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ருக்மணி வெளியில் வந்து பார்த்தார். அங்கு தனது கணவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், மகன் துரைசாமி தலையில் வெட்டுக்காயங்களுடன் அழுது கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் எழுப்பினார்.

    அவரது சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தில் குடியிருக்கும் பாலமுரளி என்ற விவசாயி ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இது பற்றி வரப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த சிறுவன் துரைசாமியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். பழனிச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், வரப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கதிர்வேல் ஆகியோர் கொலை குறித்து விசாரணை நடத்தினர்.

    ஈரோட்டில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்து ஒடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    தடயவியல் நிபுணர்களும் வந்து கைரேகைகள் சேகரித்தனர். முதல் கட்ட விசாரணையில் சொத்து தகராறில் கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தப்பி யோடிய கொலையாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×