search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிக்க முயன்றபோது கொள்ளையனை மடக்கி பிடித்த இளம்பெண்
    X

    நகை பறிக்க முயன்றபோது கொள்ளையனை மடக்கி பிடித்த இளம்பெண்

    நகை பறிக்க முயன்றபோது கொள்ளையனை மடக்கி பிடித்த இளம்பெண்ணை போலீசார் பாராட்டினர்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகள் மீனா. பி.எஸ்.சி. பட்டதாரி.

    நேற்று இரவு அவர் அருகில் உள்ள டி.எஸ்.ஆர். நகரில் நடந்த உறவினர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீட்டுக்கு தனியாக நடந்து வந்தார்.

    பெரியார் நகர், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வந்தபோது, மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென மீனா அணிந்து இருந்த நகையை பறிக்க முயன்றான். உடனடியாக மீனா அவனது கையை தட்டி விட்டு விலகினார். உடனே அவன், மீனாவின் செல்போனை பறிக்க முயன்றான்.

    அதனையும் அவர் விடாமல் பிடித்துக் கொண்டு அலறினார். இதில் நிலை தடுமாறிய கொள்ளையன் மோட்டார் சைக்கிளோடு தவறி கிழே விழுந்தான்.

    உடனே அவன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றான். அவனை மீனா மடக்கி பிடித்தார். இதற்குள் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அவர்கள் கொள்ளையனுக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவனை திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்த பாபு என்பது தெரிந்தது. கொத்தனார் வேலை பார்த்து வந்த அவன் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளான்.

    அவனுக்கு வேறு ஏதேனும் கொள்ளை, நகை பறிப்பில் தொடர்பு உள்ளதா? கூட்டாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையனை எதிர்த்து போராடிய மீனாவை போலீசார் பாராட்டினர்.

    திருவொற்றியூர் டி.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் விமலா. நேற்று இரவு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் விமலா அணிந்து இருந்த செயினை பறித்து தப்பி செல்ல முயன்றனர்.

    சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் கொள்ளையர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவர்கள் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்கி, அண்ணாமலை என்பது தெரிந்தது.

    திருவொற்றியூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த நகை பறிப்பு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ஷீலா மேரி. நேற்று மாலை பம்மலில் உள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஷீலாமேரியை தாக்கி 4 பவுன் செயினை பறித்து தப்பினர்.

    Next Story
    ×