search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா, உறவினர்கள் வாங்கி குவித்த பினாமி சொத்து - போலி நிறுவனங்கள் குறித்து ஆய்வு
    X

    சசிகலா, உறவினர்கள் வாங்கி குவித்த பினாமி சொத்து - போலி நிறுவனங்கள் குறித்து ஆய்வு

    சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் வாங்கி குவித்த பினாமி சொத்து, போலி நிறுவனங்கள் குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
    சென்னை:

    சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகள்-அலுவலகங்கள் என 187 இடங்களில், கடந்த 9-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    1800 அதிகாரிகள் 5 நாட்கள் நடத்திய சோதனையில் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் சிக்கியது. அந்த ஆவணங்களை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்தனர்.

    அப்போது சசிகலா குடும்பத்தினர் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி சுமார் ரூ.1500 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிக அளவில் சொத்துக்கள் வாங்கி சேர்த்து இருப்பது தெரியவந்தது. குறிப்பாக ரூ.1000 கோடி மதிப்புள்ள ஜாஸ் சினிமாஸ் வளாகத்தை வாங்கி இருப்பதை உறுதிப்படுத்தினார்கள்.

    இதையடுத்து சசிகலாவின் அண்ணன் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ‌சகிலா, ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், பெங்களூர் புகழேந்தி, டாக்டர் சிவக்குமார் மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் மூன்று உயர் அதிகாரிகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி வர வழைத்து விசாரித்தனர். பூங்குன்றனிடம் மட்டும் 15 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடந்தது.

    ஆவணங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதிகாரிகள் கேள்விகளை கேட்டதால் சசிகலா குடும்பத்தினர் திணறியதாக கூறப்படுகிறது.

    அதுபோல பூங்குன்றனும், பதில் சொல்ல முடியாமல் தவித்ததாக தெரிகிறது. அவர் உள்பட பலர் சசிகலா குடும்பத்தினருக்கு பினாமிகளாக இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    பூங்குன்றனை குறிவைத்து வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணைக்கு கடந்த 16-ந் தேதி பலன் கிடைத்தது. பல்வேறு புதிய தகவல்களை அதிகாரிகளிடம் பூங்குன்றன் கூறி விட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் அதிகாரிகள் கடந்த 17-ந் தேதி அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அன்றிரவு சுமார் 5 மணி நேரம் சசிகலா மற்றும் பூங்குன்றனின் அறைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பென் டிரைவ்கள், கம்ப்யூட்டர்கள், டிஸ்குகள், கடிதங்கள் மற்றும் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    கடந்த 2 நாட்களாக அந்த ஆவணங்கள் பல்வேறு தலைப்புகளில் பிரித்துப் பட்டியலிடப்பட்டன. ஏற்கனவே 187 இடங்களில் கிடைத்த ஆவணங்களுடன் அவை ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இது சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் மீதான பிடியை இறுகச் செய்துள்ளது.

    இந்த நிலையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று முதல் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். அந்த சொத்து ஆவணங்கள் மூலம் அவை எப்படி வாங்கப்பட்டன என்ற விபரம் தெரியவரும்.

    ஆனால் சொத்துக்கள் வாங்கியதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை எழுப்புவார்கள். இந்த நடவடிக்கைகள் சசிகலா குடும்பத்தினர், உறவினர்களுக்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும் என்கிறார்கள்.

    ஆவணங்களை ஆய்வு செய்து சொத்துக்களை முழுமையாக கண்டுபிடிக்கும் பணி முடிவடைய ஒரு மாதம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் போயஸ் கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ்கள் மற்றும் கம்ப்யூட்டர் டிஸ்குகளில் பல்வேறு புதிய தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் என்ன எதிர்பார்த்தார்களோ, அது போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த சோதனையில் கிடைத்து இருப்பதாக தெரிகிறது.

    மேலும் கம்ப்யூட்டர்கள், லேப்-டாப்களில் ஏற்கனவே பதிவாகி அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் தோண்டி எடுக்கும் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதில் புதிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இதற்கிடையே போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த சோதனையில் கூரியர் ரசீதுகள் கிடைத்துள்ளதாம். அதன் மூலம் சசிகலா குடும்பத்தினரின் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

    எனவே சொத்து ஆவணங்கள் பற்றிய விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன் ஒரு கட்டமாக பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, இளவரசி இருவரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

    மேலும் தேவைப்படும் பட்சத்தில் போயஸ் கார்டன் இல்லத்தில் மீண்டும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். அப்போது ஜெயலலிதா அறையையும் திறந்து ஆய்வு செய்வார்கள் என்று தெரிகிறது.

    இதற்கிடையே 5 நாட்கள் நடந்த சோதனை மூலம் சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முழுமையாக விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்தால் நீண்ட நாட்கள் ஆகி விடும்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் ஏராளமாக உள்ளன. எனவே விவேக், கிருஷ்ணபிரியா, ‌சகிலா, திவாகரன், பூங்குன்றன், டாக்டர் சிவக்குமார் உள்பட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்த தனித்தனி குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன. கோவை, திருச்சி, புதுச்சேரியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களிலும் இது தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடந்து வருகிறது.

    அந்த விசாரணைகளும் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. அப்படி ஒருங்கிணைக்கப்படும்போது சசிகலா குடும்பத்தினர் எப்படி சொத்துக்கள் வாங்கினார்கள் என்பதற்கு தெளிவான துல்லியமான விடைகள் கிடைத்து விடும்.

    வருமான வரித்துறையினர் இப்போதுதான் ஆவணங்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். ஆய்வு பணி நிறைவு பெற குறைந்தது ஓரிரு மாதங்களாகும்.

    அதன்பிறகே சசிகலா குடும்பத்தினரில் யார், யார் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுப்பது என்பதை அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள். எனவே சசிகலா குடும்பத்தினர் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உரிய நடவடிக்கைகள் பாய்வதற்கு சில மாதங்களாகும் என்று வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×