search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5½ கிலோ தங்கம் பறிமுதல்
    X

    இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5½ கிலோ தங்கம் பறிமுதல்

    இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1½ கோடி மதிப்புள்ள 5½ கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமேசுவரம்:

    இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு கடல் வழியாக அடிக்கடி போதை பொருள், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இங்கிருந்து இலங்கைக்கும், அங்கிருந்து ராமேசுவரத்துக்கும் கடத்தல் கும்பல் படகுகளில் பொருட்களை கடத்தி வருகிறார்கள்.

    இதனை கண்காணிக்க இந்திய கடலோர காவல் படை மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கையின் காரணமாக கடத்தல் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனிடையே இலங்கையில் இருந்து மண்டபம் பகுதிக்கு தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மண்டபம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு கரையில் நின்றது. அதன் அருகே நின்றிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். உடனே சுதாரித்துக் கொண்ட கியூ பிரிவு போலீசார் அவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் கீழக்கரையை சேர்ந்த நசீர் என்பது தெரிய வந்தது. அந்த படகை சோதனை செய்தபோது அங்கிருந்த பையில் 5½ கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் இருந்தன. தங்க கட்டிகளையும், படகையும் பறிமுதல் செய்த போலீசார் நசீரை கைது செய்து விசாரணைக்காக மண்டபம் அழைத்து சென்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.1½ கோடி ஆகும்.

    இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்க கட்டிகள் குறித்து போலீசார் நசீரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்தும் தீவிர விசாரணையை கியூ பிரிவு போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். கடற்கரையில் 5½ கிலோ தங்கம் சிக்கிய சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×