search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை சில மணிநேரத்தில் சரி செய்த அதிகாரிகள்
    X

    அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை சில மணிநேரத்தில் சரி செய்த அதிகாரிகள்

    சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். பஸ் நிலையம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் சிலமணி நேரத்தில் அதனை சரி செய்தனர்.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டை-சென்டிரல் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் அடிக்கடி அண்ணா சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்படுகிறது.

    இதேபோல் அண்ணா சாலையில் உள்ள தேனாம்பேட்டை டி.எம்.எஸ். பஸ் நிலையம் அருகே நேற்று இரவு சுமார் 2 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்துக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளும், ஊழியர்களும் விரைந்து வந்தனர். பள்ளம் விழுந்த இடத்தை ஆய்வு செய்த அவர்கள், பள்ளத்தை மூடும் பணியை துரிதப்படுத்தினர்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளம் விழுந்த இடத்துக்கு கீழே ஏற்கனவே சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்துவிட்டது. இந்த பள்ளம் எப்படி ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி உறுதியாக தெரியும்’ என்றனர்.

    பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார், மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பிவிட்டனர். குறிப்பாக தேனாம்பேட்டையில் இருந்து சென்டிரல் நோக்கி செல்லும் வாகனங்கள் விஜயராகவ சாலை வழியாகவும், தேனாம்பேட்டை பஸ் நிலையம் அருகே ஒரு வழிப்பாதையிலும் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்தபடி சென்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி அண்ணா சாலை எல்.ஐ.சி. கட்டிடம் அருகேயும், 2016-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. சிக்னல் அருகிலும் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி அண்ணா சாலை சர்ச் பார்க் பள்ளி அருகே பெரிய பள்ளம் விழுந்தது. அதில் மாநகர பஸ்சும், காரும் சிக்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது தேனாம்பேட்டை பஸ் நிலையம் அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அண்ணா சாலையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். பஸ் நிலையம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் சிலமணி நேரத்தில் அதனை சரி செய்தனர்.
    Next Story
    ×