search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
    X

    தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் வழக்கத்தை விட அதிகமாகவே மழை பெய்தது. தமிழகம் முழுவதும் பெய்து வந்த மழையானது படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தெற்கு தமிழக கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது வலுவிழந்து விட்டதால் தற்போது தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை. இருந்தபோதும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வருகிற 21-ந் தேதி(நாளை) அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தமிழகத்தில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர் தொலைவில் உருவாக உள்ளதால், தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ஆனால் காற்றழுத்த தாழ்வு நிலையானது நகர்ந்து தமிழக கடலோர பகுதிக்கு வந்தால் மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் தூத்துக்குடியில் 3 செ.மீ. மழையும், விருதுநகரில் 2 செ.மீ. மழையும், காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது. 
    Next Story
    ×