search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. ஆன்லைன் வணிகத்தால் சில்லரை வியாபாரம் பெருமளவில் பாதிப்பு: வெள்ளையன்
    X

    ஜி.எஸ்.டி. ஆன்லைன் வணிகத்தால் சில்லரை வியாபாரம் பெருமளவில் பாதிப்பு: வெள்ளையன்

    பண மதிப்பு நடவடிக்கையால் மக்களிடம் பணப் புழக்கம் குறைந்துள்ளது. சிறு, குறு தொழில்கள் கைத் தொழில்கள் முடங்கிவிட்டன என்று வெள்ளையன் கூறினார்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மத்திய சென்னை மாவட்ட ஆலோசனை கூட்டம் கொளத்தூரில் இன்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ப.தேவராஜ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டார். ஆன்லைன் வர்த்தகம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பாதிப்பு குறித்து வணிகர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    அதன் பின்னர் த.வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. ஆன்லைன் வர்த்தகத்தால் நாட்டில் சில்லரை வணிகம் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பண மதிப்பு நடவடிக்கையால் மக்களிடம் பணப் புழக்கம் குறைந்துள்ளது. சிறு, குறு தொழில்கள் கைத் தொழில்கள் முடங்கிவிட்டன. மத்திய அரசு, சில்லரை வணிகர்களை ஒழிக்க குறிவைத்து செயல்பட்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி. ‘ஆன்லைன்’ வணிகத்தை எதிர்த்து வருகிற ஜனவரி 1-ந்தேதி தமிழகம் முழுவதும் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும். கிராமப்புறங்களிலும் ‘ஆன்லைன்’ வர்த்தகத்தை கொண்டு வந்து உள் நாட்டு வணிகத்தை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே வரி என்ற திட்டம் இந்தியாவில் பயன் தராது. இது அன்னிய நாட்டு நிறுவனங்களுக்குத்தான் சாதகமாக அமையும்.


    தற்போது மத்திய அரசு அறிவித்த ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது வெறும் கண்துடைப்பு தான். பொதுமக்கள், வியாபாரிகள், எதிர்ப்புகளையொட்டி மத்திய அரசு பணிந்துள்ளது. சில்லரை வணிகத்தை காப்பாற்ற ஜி.எஸ்.டி. வரியை முழுவதும் நீக்க வேண்டும். பழைய வரி விதிப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பி.பரமசிவம், பொருளாளர் அரிகிருஷ்ணன், வி.கதிரேசன், லெனின், ஜோதிராம், பொன்சீலன், குமார், சந்தானம், சாதிக்பாட்சா, பாலமுருகன், எட்வர்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×