search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: ராமதாஸ் பேட்டி
    X

    முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: ராமதாஸ் பேட்டி

    வீழ்ச்சிப் பாதையில் தமிழக அரசு சென்று கொண்டிருப்பதாகவும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகி விட்டது. சென்னை மாநகராட்சி பகுதியில் ரூ.3000 கோடிக்கு மேல் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முடங்கி கிடக்கிறது.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோடம்பாக்கத்தில் இருந்து சேத்துப்பட்டு வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு ஒரு மேம்பாலம், உஸ்மான் ரோடு மேம்பாலம் நீட்டிப்பு, தி.நகர், மயிலாப்பூர், எழும்பூர், பாரிமுனை ஆகிய இடங்களில் பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப் போவதாக அறிவித்தார்கள்.

    ஆனால் ஒரு திட்டம் கூட நடக்கவில்லை. மாநகராட்சி பல ஆயிரம் கோடி கடனில் தான் மூழ்கி கிடக்கிறது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் இதே நிலைதான் உள்ளது.



    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 78 திட்டங்களுக்கு நிதியே ஒதுக்கவில்லை. இந்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.1.50 லட்சம் கோடி தேவை. இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் இந்த நிதியை ஒதுக்க முடியாது.

    போக்குவரத்து கழக சொத்துக்கள் ரூ.11 ஆயிரம் கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ரூ.3.14 லட்சம் கோடி கடனில் மூழ்கி கிடக்கிறது. ஒரு ஆண்டுக்கு வட்டியாக மட்டும் ரூ.25 ஆயிரத்து 982 கோடி செலுத்தப்படுகிறது.

    இந்த கடன் வளர்ச்சிக்கு உதவாது. வீழ்ச்சிக்குதான் வழிவகுக்கும். வீழ்ச்சிப் பாதையில்தான் தமிழக அரசு சென்று கொண்டிருக்கிறது. மொத்தத்தில் அரசு திவாலாகி விட்டது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.



    சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. உச்சக்கட்டமாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. இந்த சோதனையை ஜெயலலிதா உயிரோடு இருந்து சிறை தண்டனை பெற்ற போதே நடத்தி இருக்க வேண்டும்.

    ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐவர் குழு வீட்டில் சோதனை நடத்தினாலே தமிழகத்தின் கடன்களை அடைத்து விடலாம்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அவலநிலை மாறுவதற்கு பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

    பா.ம.க. கூட்டணியில் பா.ஜனதா, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை தவிர எல்லா கட்சிகளும் வரலாம்.

    நான் எந்த நடிகரையும் அரசியலுக்கு வரக்கூடாது என்று எதிர்க்கவில்லை. யார் வேண்டுமானாலும் வரட்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, மு.ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×