search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதா வீடியோ படம் எடுக்க சொன்னார்: திவாகரன்
    X

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதா வீடியோ படம் எடுக்க சொன்னார்: திவாகரன்

    மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை வீடியோ எடுத்துக்கொள் என்று ஜெயலலிதா கூறியதாக, திவாகரன் சொன்ன தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    திருவாரூர்:

    அ.தி.மு.க. அம்மா அணியின் திருவாரூர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மன்னார்குடியில் நடந்தது. அலுவலகத்தை சசிகலாவின் தம்பி திவாகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1996-ம் ஆண்டு முதலே சசிகலா விசாரணை வளையத்தில்தான் இருக்கிறார். அவர் ஒருநாள் கூட சும்மா இல்லை. ஜெயலலிதா இருந்தபோதும் சசிகலா விசாரணை வளையத்தில் தான் இருந்தார். சசிகலாவை ஜெயலலிதா முழுமையாக பயன்படுத்தினார். அப்படி இருந்தும் சசிகலாவுக்கு எந்தவித பாதுகாப்பையும் கொடுக்காமல் சென்றுவிட்டார்.

    சாதாரண ஒருவர் ஒரு பெரிய தலைவரிடம் கூடவே இருந்து அவர்கள் சொல்வதை எல்லாம் செய்துவிட்டு அந்த தலைவரின் காலத்துக்கு பிறகு பாதுகாப்பில்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். அதுதான் சசிகலாவுக்கு நடந்திருக்கிறது.

    எல்லா பெண்களுக்கும் தற்போது சசிகலா ஒரு சரியான உதாரணம். சசிகலாவை பார்த்து பெண்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது வீடியோ எடுத்துள்ளனர். தேவைப்பட்டால் அது தொடர்பான விவரங்களை ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் ஒப்படைப்பார்கள்.

    ஜெயலலிதா மரணம் அடையும் முன்பே சிகிச்சையில் சந்தேகம் உள்ளதாக தி.மு.க.வினர் குற்றம் சொல்லத் தொடங்கிவிட்டனர். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அப்போதே சொன்னேன்.



    மேலும் ஜெயலலிதாவும் அதையே கூறியுள்ளார். “சசி, நான் சிகிச்சை பெறுவதை வீடியோகிராப் செய்து கொள்... நான் போய்விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நம்மிடத்திலேயே துரோக கும்பல் உள்ளது” என்று கூறியுள்ளார். அவர் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தாமல் போனதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

    அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் எங்களை தாக்கினால்தான் காலந்தள்ள முடியும் என்பதால் விமர்சித்து வருகின்றனர்.

    எங்கள் வீட்டில் ஆரம்பித்த வருமான வரி சோதனை போயஸ் கார்டன் வரை நடைபெற்றுள்ளது. அதிகாரிகள் அவர்களின் கடமையை செய்துள்ளனர். எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம்.

    தலைமை செயலக அலுவலகக்திலும், தலைமை செயலாளர் வீட்டிலும் ஏற்கனவே சோதனை நடத்தியுள்ளனர். சேகர்ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் நடைபெற்ற சோதனை மீதான நடவடிக்கை தொடர்பாகவும் விசாரணை நடக்கும். அந்த நடவடிக்கைகளை ஒரே நாளில் முடிக்க முடியாது.

    போயஸ் கார்டனில் நடந்த சோதனையின்போது பென்டிரைவ் கைப்பற்றப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. நான் போயஸ் கார்டனுடன் இருந்த தொடர்பை விட்டு பல நாட்கள் ஆகிறது. வருமான வரியை பிடிப்பதற்காகத்தான் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன.



    இந்த சோதனையின்போது சி.டி. எங்கே என்று பலர் கேட்டதாக சொல்கிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக ஒரு சி.டி. இருப்பதாக தினகரன் சொல்லியிருந்தார். அந்த வீடியோ ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஹேண்ட் கேமராவில் எடுக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகத்தினரும் எடுத்தனர். வருமான பரிசோதனைக்கு வந்திருந்த அதிகாரிகள் தங்களது பணிகளை செய்தனர். இதை பயன்படுத்தி உள்ளே வந்த சிலர் அந்த வேலையை பார்த்திருக்கிறார்கள்.

    ஜெயலலிதாவின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு பிறகு நிறைய பேருக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மாற்று அணியில் இருந்தவர்களே என்னை சந்தித்து சால்வை அணிவித்துள்ளனர்.

    நடுஇரவிலேயே இந்த மனமாற்றம் உருவானதற்கு காரணம் ஜெயலலிதாவின் வீட்டிலேயே சோதனை நடத்தியதுதான். ஒரு சில அமைச்சர்களை தவிர மற்ற அமைச்சர்கள் இந்த நடவடிக்கையை ஏற்கவில்லை.

    1996-ம் ஆண்டு ப.சிதம்பரத்தால் போடப்பட்ட வழக்கில் தற்போது எம். நடராஜனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்ததையடுத்து அவர் மருத்துவமனையில் உள்ளார். கடலில் இறங்கி விட்டோம். அலைக்கு பயந்தால் முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×