search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவுக்கு சொந்தமான ‘மிடாஸ்’ நிறுவனத்தில் இருந்து மதுபான கொள்முதல் நிறுத்தம்
    X

    சசிகலாவுக்கு சொந்தமான ‘மிடாஸ்’ நிறுவனத்தில் இருந்து மதுபான கொள்முதல் நிறுத்தம்

    சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மது பானங்களை கொள்முதல் செய்வதை நேற்று முதல் டாஸ்மாக் நிறுவனம் நிறுத்தி விட்டது.
    சென்னை:

    தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனம் உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான வகைகளை 11 நிறுவனங்களிடம் இருந்து வாங்கி கடைகளில் விற்பனை செய்கிறது.

    இதற்காக மாதம்தோறும் 50 லட்சம் பெட்டி மதுவகைகளை டாஸ்மாக் நிறுவனம் வாங்குகிறது. கடந்த 7 வருடங்களாக சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்திடம் இருந்துதான் அதிக பெட்டிகள் வாங்கப்பட்டது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு டி.டி.வி.தினகரன், தனி அணியாக செயல்பட தொடங்கியதில் இருந்து மிடாஸ் நிறுவனத்தில் மது கொள்முதல் செய்வதை டாஸ்மாக் நிறுவனம் படிப்படியாக குறைக்கத் தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சசிகலா உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், நிறுவனங்கள் என 187 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் மிடாஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இந்த நிலையில் மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மது பானங்களை கொள்முதல் செய்வதை நேற்று முதல் டாஸ்மாக் நிறுவனம் நிறுத்தி விட்டது.

    இதுபற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மிடாஸ் ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல்வேறு முறைகேடுகளை கண்டறிந்தனர். இதுபற்றி விசாரணை நடத்தப்பட உள்ளது. இதனால் மிடாசிடம் மது வகைகள் வாங்குவதை நிறுத்தி உள்ளோம்.

    வருமான வரித்துறை சோதனையில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது பானங்களை வழங்கிய கணக்குக்கும், மிடாஸ் வங்கி கணக்குக்கும் அதிக வேறுபாடு இருப்பது தெரியவந்தது.

    எனவே விசாரணை முடியும் வரை மிடாசில் மது பானங்களை கொள்முதல் செய்ய மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×