search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை
    X

    ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    துப்பாக்கி சூடு நடத்தியும், தாக்கியும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை விரட்டியடித்து வருகிறது. நேற்று ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 441 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் வழக்கம்போல் இந்த பகுதி சர்வதேச கடல் பகுதி. இங்கு மீன்பிடிக்க உங்களுக்கு உரிமையில்லை. எனவே இங்கிருந்து செல்லுங்கள் என்று மீனவர்களை விரட்டினர்.

    மேலும் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கியதோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் உயிருக்கு பயந்து கரை திரும்ப முடிவு செய்தனர்.

    அப்போது தங்கச்சி மடத்தை சேர்ந்த கில்டாமேரி என்பவரின் விசைப்படகில் இருந்த ஜெய்லஸ் (வயது 35), மெல்சன் (38), விஜய் (30), நவீன் (31), ஆகிய மீனவர்கைளை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இதேபோல் மற்றொரு பகுதியில் மீன்பிடித்த மண்டபம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களையும் விசைப் படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.

    சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் மன்னார், காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×