search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த காட்சி
    X
    சேலம் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த காட்சி

    அமைச்சர்கள் வீடு-அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

    அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
    சேலம்:

    பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் இன்று சேலம் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார்.

    அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு இலவச திட்டங்களுக்காக ரூ.62 ஆயிரம் கோடியை செலவு செய்கிறது. இதில் வெறும் ரூ.40ஆயிரம் கோடியை பாசன திட்டங்களுக்கு செலவு செய்தாலே கூடுதலாக 30 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

    தமிழக அரசு மின் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது. 2003-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் அதிக அளவில் ஊழல் நடந்து வருகிறது. குறைந்த விலையில் தாரை வாங்காமல் அதிக விலைக்கு தாரை கொள்முதல் செய்கிறார்கள்.தார் கொள்முதலில் மட்டும் ஆயிரம்கோடி வரை ஊழல் நடந்து உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம். மணல் விற்பனையிலும் அதிக அளவில் ஊழல் நடந்து உள்ளது.



    ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள். சசிகலா சொத்து சேர்க்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஏஜெண்டுகளாக செயல்பட்டனர். ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் தான் அதிக அளவில் ஊழல் செய்கிறார்கள்.



    எனவே அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும். அப்போது தான் அதிகமான பணம் சிக்கும். தமிழக அரசின் ஊழல்கள் குறித்து ஏற்கனவே நாங்கள் கவர்னரை சந்தித்து புகார் மனு கொடுத்து இருக்கிறோம். மீண்டும் கவர்னரை சந்தித்து மனு கொடுப்போம்.

    இவ்வாறு அவர்கூறினார்.
    Next Story
    ×