search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தலையிட எனக்கு அதிகாரம் இல்லை: தலைமை செயலாளர்
    X

    புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தலையிட எனக்கு அதிகாரம் இல்லை: தலைமை செயலாளர்

    புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தலையிட எனக்கு அதிகாரம் இல்லை என்று தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    மத்திய உள்துறை அமைச்சகம் புதுவையில் நேரடியாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளான சாமி நாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது.

    கவர்னர் கிரண்பேடி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். ஆனால், மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை ஏற்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார்.

    இதனால் வருகிற 23-ந் தேதி கூட உள்ள புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டத்தில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


    இதையடுத்து பாரதிய ஜனதாவினர் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை செயலாளர் அஸ்வனி குமாரை சந்தித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை நடை முறைப்படுத்த வேண்டும் என மனு அளித்தனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தனது அதிகார வரம்புக்குள் வரவில்லை என தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

    புதுவை கவர்னர் மாளிகையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் பொறுப் பேற்றது முதல் அரசு துறைகள் நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். குறிப்பாக காவல்துறையில் ஆய்வு செய்த போது, பல்வேறு பிரச்சினைகள் உள்ளது தெரியவந்துள்ளது. பதவி உயர்வு விவகாரம் நீண்ட நாட்களாக உள்ளது. அதை சட்டத்தின்படி அமல்படுத்த வேண்டும். குற்ற தடுப்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளது. இதற்காக சிறிய மாநிலங்களில் முதலிடத்தை புதுவை பெற்றுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்கள் மறு வாழ்வுக்கு வகை செய்ய வேண்டும். இதற்காக காவல்துறை, தொழிலாளர் துறை, சமூக நலத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பின்னர் கவர்னர்- முதல்-அமைச்சர் கருத்து வேறுபாடு குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் அரசு ஊழியன். சட்டத்தின்படி நான் செயல்பட வேண்டும். கவர்னர், முதல்வர் உள்ளிட்டோருக்கு சரியான அறிவுரையை கூற வேண்டிய கடமை உள்ளது. பா.ஜனதா நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக என்னிடம் கடிதம் தந்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஏற்கனவே மத்திய உள்துறை அறிவிப்பு அனுப்பி உள்ளது. சட்டப்பேரவை தலைவரும் தனது நிலையை தெரிவித்துளளார். இந்த விவகாரம் எனது அதிகார வரம்புக்குள் வராது. இதில் நான் எதுவும் செய்வதற்கில்லை.

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் புதுவைக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடு செய்யும். எனினும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் மாநிலத்துக்கு வருவாயை அதிகரிக்க செய்ய திட்டமிட்டுள்ளோம். நிதி தட்டுப்பாடு உள்ளதால் தான் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. நிதி நிலைமை சீரானால் நலத்திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்படும்

    இவ்வாறு அஸ்வனி குமார் கூறினார்.

    Next Story
    ×