search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
    X

    டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

    டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், தான் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தை அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், பரிசோதனை செய்து பார்த்ததில் அதிக அளவில் வேதிப்பொருள் இருந்தது தெரியவந்ததாகவும் கூறியிருந்தார்.



    மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு தரமற்ற மற்றும் கலப்பட மது வகைகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    ஆனால், டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை பரிசோதிப்பது சாத்தியமில்லை என்றும், மதுபான ஆலையிலேயே மதுபானங்களை ஆய்வு செய்ய உத்தரவிடும் வகையில் மனுவை திருத்தி தாக்கல் செய்யவேண்டும் என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    அதன்படி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, டாஸ்மாக் மதுபானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யும்படி உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ‘டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் உற்பத்தி ஆலைகளுக்கே நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, டிசம்பர் 22-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க  வேண்டும். இதுதவிர டாஸ்மாக் மதுபானங்களை சப்ளை செய்யும் 17 நிறுவனங்களும் பதில் அளிக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×