search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 4½ டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே சேமிப்பு
    X

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 4½ டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே சேமிப்பு

    ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 4½ டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே சேமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. மழை தொடங்கிய ஒரு சில நாட்களில் தீவிரமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி மழை தீவிரம் காட்டியதால் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 10 நாளிலேயே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் 6 முதல் 8 டி.எம்.சி. வரை தண்ணீர் சேமிக்கப்படலாம் என்று அதிகாரிகள் எண்ணியிருந்தனர்.



    ஆனால் அதற்கு எதிர்மறையாக தற்போது வெறும் 4½ டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே சேமிக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததே இதற்கு காரணம் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    மாநகர பகுதிகளில் பெய்த அளவுக்கு ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பரவாயில்லை. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1 டி.எம்.சி. கூட இல்லாமல் 987 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது.

    ஆனால் நேற்றைய நிலவரப்படி 4.472 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. குறிப்பாக பூண்டியில் 963 மில்லியன் கனஅடியும், சோழவரத்தில் 615 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 1.497 டி.எம்.சி.யும், செம்பரம்பாக்கத்தில் 1.397 டி.எம்.சி.யும், ஆகமொத்தம் 4.472 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மழையை பொறுத்தவரையில் பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 33 மில்லி மீட்டர் மட்டுமே மழை பெய்தது. ஆனால் சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து வினாடிக்கு 16 கனஅடியும், புழல் ஏரியில் இருந்து 84 கனஅடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 52 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் சென்னையில் பெய்தது போன்று மழை பெய்திருந்தால் 6 முதல் 8 டி.எம்.சி. வரை தண்ணீர் சேமிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் எதிர்பார்த்த அளவு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் தற்போது 4.472 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே சேமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம்முடைய 3 மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். வடகிழக்கு பருவமழைக்கு இன்னும் காலம் இருப்பதால் போதிய மழை பெய்யும். அதன் மூலம் ஏரிகளிலும் தண்ணீர் மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    Next Story
    ×