search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் இன்று வருமான வரி அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகவில்லை
    X

    திருச்சியில் இன்று வருமான வரி அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகவில்லை

    திருச்சியில் இன்று வருமான வரி அலுவலகத்தில் திவாகரன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை.
    திருச்சி:

    சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 9-ந்தேதி அதிரடி சோதனையை தொடங்கினர். 187 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 6 நாட்களாக நீடித்த இந்த சோதனையில் ரூ.1,430 கோடி வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதேபோல் மன்னார் குடி சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீட்டில் தொடர் சோதனை நடத்தப்பட்டது. மேலும் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரி, தினகரன் அணி மாவட்ட செயலாளர் காமராஜ் மற்றும் திவாகரனின் கார் டிரைவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கருப்பு பணத்தை மாற்றுவதற்காக கல்லூரி ஊழியர்களின் வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வங்கி அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி கல்லூரியில் உள்ள ஒரு தனி அறையில் பூட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    அத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகள் திவாகரனை கல்லூரிக்கு அழைத்து சென்று சுமார் 14 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க முடியாமல் திணறினார். இதனால் திவாகரனை நேரில் அழைத்து விசாரிக்க சம்மன் அனுப்ப முடிவு செய்தனர்.

    4 நாட்கள் சோதனை நிறைவில் கணக்கில் வராத தங்க நகைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பல கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை 14 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். மேலும் அவரை சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.

    ஆனால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் ஆஜராகவில்லை என்று காரணம் கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி திருச்சி கண்டோன்மென்டில் உள்ள வருமான வரித்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    அப்போது அவரிடம் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத நகை, பணம் மற்றும் ஊழியர்களின் வங்கி கணக்குகளில் பணம் டெபாசிட் தொடர்பாக உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்த தயார் நிலையில் இருந்தனர்.



    இன்று காலை 10 மணி வரை மயிலாடுதுறையில் இருந்த திவாகரன் 12 மணிக்குள் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. திவாகரனின் ஆடிட்டர் ஒருவர் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்தார். அவர் அதிகாரிகளிடம் திவாகரன் வராதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இன்று பிற்பகல் அல்லது அடுத்த வாரம் ஆஜராவார் என திவாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    முன்னதாக திவாகரன் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராவார் என்று கூறப்பட்டதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    Next Story
    ×