search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு பேரறிவாளனை விடுதலை செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும்: ராமதாஸ்
    X

    மத்திய அரசு பேரறிவாளனை விடுதலை செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும்: ராமதாஸ்

    பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிந்தும் அவரை அந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் இவ்வழக்கில் எந்தக்குற்றமும் செய்யாத பேரறிவாளனை சிக்க வைக்க தீட்டப்பட்ட சதி வலை தாமதமானாலும் அறுத்தெறியப்பட்டிருக்கிறது.

    இந்திய காவல் பணி அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் இது குறித்து தாக்கல் செய்த விளக்க மனுவில், ராஜிவ் கொலை விசாரணையின் போது பேரறிவாளன் எவ்வாறு சிக்க வைக்கப்பட்டார் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். அந்த பேட்டரிகள் எதற்காக ஸ்ரீபயன்படுத்தப்படப் போகின்றன என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் பேரறிவாளன் கூறினார்.

    இந்த விவரங்களை சில ஆண்டுகளுக்கு முன்பே ஊடகங்களிடம் தியாகராஜன் தெரிவித்து விட்டார் என்றாலும் கூட இப்போது உச்சநீதிமன்றத்தில் இவற்றை மனுவாக தாக்கல் செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ராஜிவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும்.

    இப்போது அந்த வாக்குமூலமே தவறானது என்பதை அதை பதிவு செய்த அதிகாரியே ஒப்புக் கொண்டிருப்பதால் பேரறிவாளன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தகர்க்கப்பட்டுவிட்டன. இனி அவரை விடுதலை செய்வதைத் தவிர நீதிமன்றத்திற்கு வேறுவழியில்லை.

    ராஜிவ் கொலையில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்று விசாரணை அதிகாரிக்கு தொடக்கத்திலேயே தெரிந்திருந்த போதிலும் அவரை விடுவிக்க அந்த அதிகாரி முயற்சி செய்யவில்லை. மாறாக அவரின் வாக்குமூலத்தை திரித்து எழுதி தூக்குத் தண்டனை வழங்கப்படுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்.

    ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த வெடிகுண்டை தயாரித்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு உண்மைகளை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சி.பி.ஐ. அமைப்பின் பல்முனை கண்காணிப்புக்குழு 19 ஆண்டுகளுக்கு பிறகும் விசாரணையை முடிக்கவில்லை. இவையெல்லாம் இயல்பாக நடக்கவில்லை.



    பேரறிவாளனின் வாக்கு மூலத்தை திரித்து எழுதிய அதிகாரிக்கு மனசாட்சி உறுத்தி, அதன் காரணமாக தனது தவறை அவர் இப்போது ஒப்புக் கொண்டிருப்பதால் தான் அந்த சதிவலை அறுக்கப்பட்டிருக்கிறது.

    எனவே, அவரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு முன்பாகவே தமிழக அமைச்சரவை கூடி, அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி பேரறிவாளனை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுனருக்கு அனுப்பி விடுதலையை விரைவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×