search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே கட்டிட தொழிலாளியை தூக்கி வீசிய யானை
    X

    கோவை அருகே கட்டிட தொழிலாளியை தூக்கி வீசிய யானை

    கோவை அருகே கட்டிட தொழிலாளியை யானை தூக்கி வீசியது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    வடவள்ளி:

    கோவை வடவள்ளி மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி. காலனி பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணியில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஊரப்பட்டி ஒக்கிலிப்பட்டியை சேர்ந்த சுரேஷ் குமார் (33) வேலை பார்த்து வந்தார். இவர் இங்கு தங்கி கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தார்.

    இன்று காலை 7 மணியளவில் சுரேஷ் குமார் அங்குள்ள புதர் பகுதிக்கு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கு 4 வயது குட்டி யானையுடன் வந்த 30 வயது மதிக்கதக்க ஆண் யானை திடீரென சுரேஷ் குமாரை தூக்கி வீசியது.

    இதில் அவர் மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த இந்திரா நகரை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து சுரேஷ் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கட்டிட தொழிலாளியை தூக்கி வீசிய ஆண்யானையுடன் வந்த குட்டி யானை கடந்த சில மாதங்களுக்கு முன் நரசிபுரம் பகுதியில் இறந்த யானையின் குட்டி என தெரிய வந்துள்ளது.

    இந்த யானைகள் இன்று காலை மருதமலை பாரதியார் நகர், அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வடவள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    வனவர் குமார் தலைமையில் யானையை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் கட்டிட தொழிலாளியை தூக்கி விசியது தெரிய வந்தது.

    யானை நடமாட்டம் காரணமாக அதிகாலையில் பொது மக்கள் வெளியில் வர அஞ்சுகிறார்கள்.
    Next Story
    ×