search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார மீட்டர் கொள்முதல் செய்ய தடை: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    மின்சார மீட்டர் கொள்முதல் செய்ய தடை: ஐகோர்ட்டு உத்தரவு

    ஒரு முனை மின்சாரத்தை அளவிடும் பெட்டிகளை வழங்க கோரி மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பிறப்பித்த ஒப்பந்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், 29 லட்சத்து 88 ஆயிரத்து, ஒரு முனை மின்சாரத்தை அளவிடும் பெட்டி கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டது.

    இதன்படி பல தனியார் நிறுவனங்கள் இந்த ஒப்பந்த புள்ளி கோரின. கடந்த 3ந்தேதி இந்த ஒப்பந்த புள்ளி இறுதி செய்யப்பட்டது. இதில், எச்.பி.எல். நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, இந்த ஒப்பந்த புள்ளியில் பங்கேற்ற நொய்டாவை சேர்ந்த கேபிட்டல் பவர் சிஸ்டம் என்ற நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஒரு முனை மின்சாரத்தை அளவிடும் பெட்டியை வழங்க எங்கள் நிறுவனமும் முன்வந்தது. இதற்காக ஒரு பெட்டியின் விலை ரூ.453 என்று குறிப்பிட்டு, ஒப்பந்த புள்ளி கோரியிருந்தோம். மிகவும் குறைவான தொகையை நாங்கள் குறிப்பிட்டதால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர், இந்த ஒப்பந்த நடவடிக்கையில் இருந்து எங்கள் நிறுவனத்தை அதிகாரிகள் வெளியேற்றி விட்டனர்.


    ஒப்பந்த நடவடிக்கையில் எங்கள் நிறுவனத்தை பங்கேற்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆனால், விலை அதிகமாக குறிப்பிட்ட, அதாவது ஒரு பெட்டி ரூ.495 என்று நிர்ணயம் செய்த எச்.பி.எல். நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வழங்கியுள்ளது. இது சட்டவிரோதமானது.

    ஏற்கனவே, ஒரு பெட்டியை ரூ.453 என்ற விலையில் 30 லட்சம் பெட்டிகளை நாங்கள் வழங்கியுள்ளோம். அதிகாரிகளின் உள்நோக்க செயல்களில், இந்த பெட்டி கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலம் பல கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு நஷ்டம் ஏற்படும்.

    எனவே, இந்த ஒப்பந்த பணியை எச்.பி.எல். நிறுவனத்துக்கு வழங்கியதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர் ஒரு முனை மின்சாரத்தை அளவிடும் பெட்டிகளை வழங்க கோரி மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பிறப்பித்த ஒப்பந்த உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×