search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜெயலலிதா இருந்திருந்தால் கவர்னர் ஆய்வு செய்திருக்க முடியுமா?: அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா

    கோவையில் அதிகாரிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கவர்னரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக்கு எதிரானது என அன்வர் ராஜா எம்.பி கூறியுள்ளார்.
    சென்னை:

    சமீபத்தில் தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் நேற்று கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆளுநரின் இந்த திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என்றும் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூறிவிட முடியாது, அதிகாரத்திற்கு உட்பட்டுதான் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்பது கவர்னருக்கு தெரியும் என்று பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அனைத்து மாவட்டங்களிலும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய விருப்பம் எனவும் கவர்னர் கூறியுள்ளார். கவர்னரின் செயல்பாடுகளில் தவறு இல்லை என தமிழக அமைச்சர்கள் கூறியுள்ள நிலையில், அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா இதை எதிர்த்து குரல் எழுப்பியுள்ளார்.

    கவர்னரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளதாக கூறிய அவர், ஜெயலலிதா இருந்திருந்தால் கவர்னர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கவர்னர்களை வைத்து ஆட்சி செய்ய மத்திய அரசு முயன்று வருவதாக அன்வர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
    Next Story
    ×