search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு நடத்திய கடலோர காவல்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
    X

    துப்பாக்கி சூடு நடத்திய கடலோர காவல்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

    துப்பாக்கி சூடு நடத்திய கடலோர காவல்படையினரை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகியோர் காயமடைந்ததாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினரே துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பலரும் கண்டம் தெரிவித்தனர்.

    ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களும் அவசர கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீனவர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இதனை ஏற்று மண்டபம் கடலோர போலீசார் கடலோர காவல்படையினர் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 800 படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை ஓரங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    வழக்கமாக ஒருமுறை கடலுக்கு சென்று வந்தால் ரூ. 2 கோடி ஏற்றுமதி அளவிலான மீன்களை மீனவர்கள் பிடித்து வருவார்கள். இன்று அவர்கள் கடலுக்கு செல்லாததால் ரூ. 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதே போல் மீன்பிடி தொழிலை நம்பி இருந்த வியாபாரிகள் மற்றும் பலரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    கடலோர காவல்படையினரை கைது செய்ய வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள் நாளை (வியாழக் கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    Next Story
    ×