search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவல் தெரிவித்த தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம்
    X

    சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவல் தெரிவித்த தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம்

    நெடுஞ்சாலையோரம் மதுபானக் கடை திறப்பது தொடர்பான தீர்ப்பு குறித்து ஐகோர்ட்டு விளக்கம் கேட்பதாக பொய்யான தகவலை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    நெடுஞ்சாலையோரம் மதுபானக் கடை திறப்பது தொடர்பான தீர்ப்பு குறித்து ஐகோர்ட்டு விளக்கம் கேட்பதாக பொய்யான தகவலை தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையிட்டதற்கு, ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கை தமிழக அரசின் பொறுப்பற்ற செயல் என்றும் நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.

    தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் அமைக்கக் கூடாது என்றும், ஏற்கனவே அமைந்துள்ள மதுக்கடைகளை உடனடியாக இழுத்து மூடவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகே இருந்த சுமார் 3,500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

    இந்நிலையில், சண்டிகாரில் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்பு சாலைகளாக மாற்றி, மதுக்கடைகளைத் திறக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மாநில அரசு சாலைகளை வகைப்படுத்த உரிமை உள்ளது என்றும் மதுக்கடையை திறக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் சுமார் 1,700 டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு திறந்தது. இவ்வாறு திறக்கப்பட்ட மதுகடையை மூடக்கோரி வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவர் வக்கீல் கே.பாலு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சண்டிகார் தொடர்பான வழக்கில் பிறப்பித்த உத்தரவு குறித்து சில விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு, விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் சண்டிகார் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தமிழகத்துக்கு பொருந்துமா? என்று விளக்கம் கேட்டு தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விளக்கத்தை சென்னை ஐகோர்ட்டுத் தான் கேட்கச் சொன்னது என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டுள்ளார்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், கண்டனம் தெரிவித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்றும், இது தொடர்பாக ஐகோர்ட்டு ஏன் கவலைப்பட வேண்டும்? என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து நேற்று கருத்து தெரிவித்தனர். அரசு பிளடர் ராஜகோபாலிடம், ‘மதுக்கடை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் எங்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த தீர்ப்பில் சில விளக்கத்தை ஐகோர்ட்டு கேட்கச் சொன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கூறியுள்ளது. இது சரியான நடவடிக்கை இல்லை. இதுதொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. நாங்கள் (நீதிபதிகள்) அப்படி எந்த விளக்கத்தையும் சுப்ரீம் கோர்ட்டில் கேட்கும்படி கூறவில்லை. தமிழக அரசு தான் விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளதாக எங்களிடம் அரசு வக்கீல் கூறினார். அப்படி இருக்கும்போது பொய்யான தகவலை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ஏன் தெரிவிக்க வேண்டும்? இது தமிழக அரசின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது’ என்று கூறினர்.

    பின்னர், சண்டிகாரில் மாநில நெடுஞ்சாலையை உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகளாக வகைப்படுத்திய பின்னர், மதுக்கடையை திறக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழக அரசு சாலைகளை வகைப்படுத்தவில்லை. அவ்வாறு செய்யாமல் மதுபானக்கடைகளை திறந்து விட்டு, சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று ஐகோர்ட்டு நீதிபதிகள் விளக்கம் கேட்டனர் என்று கூறியது கண்டனத்துக்குரியது’ என்றும் நீதிபதிகள் கருத்து கூறினார்கள்.
    Next Story
    ×