search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கடலோர காவல்படையினர் மீது நடவடிக்கை வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
    X

    இந்திய கடலோர காவல்படையினர் மீது நடவடிக்கை வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

    ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது அத்துமீறி இந்திய கடலோர காவல்படையினர் சுடப்பட்டதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது இத்தகைய கொடூர தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதல் நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இந்த தாக்குதலுக்கு மத்திய பா.ஜ.க. அரசு தெளிவான விளக்கத்தை தருவதோடு, இனியும் இத்தகைய தாக்குதல் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். இந்த தாக்குதலை கண்டித்து மீனவ அமைப்புகள் ராமேசுவரத்தில் நாளை (இன்று) நடத்தவிருக்கும் மறியல் போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். 
    Next Story
    ×