search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கவர்னர் திடீர் ஆலோசனை
    X

    கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கவர்னர் திடீர் ஆலோசனை

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று கோவையில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    கோவை:

    மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருப்பவர்கள் ஆளுநர்கள். ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருந்தபோதும், ஆட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது இல்லை. குறிப்பாக அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது அவரது கடமை.

    அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் ஆளுநர்கள் எடுத்துரைப்பார்கள். ஆனால், அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது கிடையாது. நேரடியாக உத்தரவும் பிறப்பிப்பது இல்லை.

    ஆனால், சமீபத்தில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் இன்று கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆளுநரின் இந்த திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.

    ஆனால், இதனை வரம்பு மீறிய செயலாக எடுத்துக்கொண்டு சர்ச்சை ஏற்படுத்த தேவையில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூறிவிட முடியாது, அதிகாரத்திற்கு உட்பட்டுதான் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்பது ஆளுநருக்கு தெரியும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

    முன்னதாக, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர்,  மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×