search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோரிப்பாளையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்த டீக்கடை அகற்றம்
    X

    கோரிப்பாளையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்த டீக்கடை அகற்றம்

    கோரிப்பாளையத்தில் கடைக்கு அருகில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த ஆணையாளர் உத்தரவிட்டார்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி டெங்கு தடுப்பு பணியாக கோரிப்பாளையம், மேலமடை மற்றும் அண்ணா பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆணையாளர் அனீஷ்சேகர் இன்று ஆய்வு செய்தார்.

    கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல காபி கடையில் நீல நிற டிரம்களில் பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்தும், அப்பொழுது பிடித்துக் கொண்டிருந்த குடிநீரில் குளோரின் அளவு குறித்தும் ஆய்வு செய்தார்.

    இந்த கடைக்கு அருகில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த ஆணையாளர் உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து மேலமடை பகுதியில் டெங்கு பாதிப்பு கண்ட வீட்டிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும், டெங்கு தடுப்பு பணியாக வீடு வீடாக பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீர் மற்றும் குளிர் சாதனப்பெட்டிகளில் ஆய்வு செய்தார். ஒரு வீட்டில் பிடித்து வைக்கப்பட்டிருந்த குடிநீரில் கொசு உற்பத்தி கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த தண்ணீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

    அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மேற்பரப்பில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் பிளீச்சிங் பவுடர் தெளிக்குமாறும், 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றுமாறும் கட்டிடத்தின் உரிமையாளரிடம் கூறினார்.

    மேலும் அண்ணா பஸ் நிலையப்பகுதியில் உள்ள கடைகளில் பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆணையாளர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.

    ஒரு பெட்டிக்கடையில் நீல நிற டிரம்மில் பிடித்து வைக்கப்பட்டிருந்த குடிநீரில் டெங்கு கொசு புழு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த கடைக்கு, ஆணையாளர் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான அறையில் ஆய்வு செய்த அவர், அங்கிருந்த தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், கண்காணிப்பு பொறியாளர் சுகந்தி, உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×