search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயக்க ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்த ஆண் யானை உயிரிழப்பு
    X

    மயக்க ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்த ஆண் யானை உயிரிழப்பு

    கோவை அருகே மயக்க ஊசி போட்டு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட யானை இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கவுண்டம்பாளையம்:

    கோவையை அடுத்துள்ள ஆனைக்கட்டி வனப்பகுதி யில் கடந்த சில நாட்களாக சுமார் 25 வயது மதிக்க தக்க ஆண் யானை காலில் காயத்துடன் சுற்றி திரிந்தது.

    இதனை பார்த்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர் மனோகரன் உள்ளிட்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக யானைக்கு சிகிச்சை அளிக்க அதனை கண்காணித்து வந்தனர்.

    கும்கி யானை உதவியுடன் காயம் அடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இதற்காக கோவை சாடி முகாமில் இருந்து கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டது.

    மேலும் அப்பகுதியில் பசுந்தீவனம் போடப்பட்டது. கும்கி யானையை பார்த்ததும் காட்டு யானை அங்கு வந்தது. அது அங்கு கிடந்த பசுந்தீவனங்களை சாப்பிட்டது. இதனால் சிறிது புத்துணர்ச்சியுடன் காணப்பட்டது.

    அப்போது காட்டு யானையின் காலில் ஏற்பட்ட காயத்தால் வீக்கம் அதிகரித்து இருப்பது தெரிய வந்தது. கோவை மண்டல வன பாதுகாப்பு அலுவலர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் சதீஷ், உதவி வன பாதுகாவலர் நசீர் உள்ளிட்டோர் காட்டு யானைக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இதற்காக மேலும் ஒரு கும்கி யானை சுஜய் வரவழைக்கப்பட்டது.

    அதன் பின்னர் சிகிச்சை தொடங்கியது. முதலில் வன கால்நடை மருத்துவ அலுவலர்கள் 2 முறை மயக்கி ஊசி செலுத்தினர். இதனால் யானை நடக்க முடியாமல் நின்றது. இதனை பயன்படுத்தி கொண்ட கால்நடை மருத்துவ அலுவலர்கள் வலி நிவாரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினர்.

    ஒரு நீண்ட குச்சியில் ஊசி மற்றும் மருந்துகளை கட்டி முன்னங்காலில் இருந்த கட்டியை கிழித்து அறுவை சிகிச்சை செய்து காயத்துக்கு மருந்து போட்டனர்.

    இந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட யானை இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சோகம் அடைந்தனர். வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்த யானையின் உடல் அங்கு புதைக்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×