search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் கவர்னருக்கு உள்ள அதிகாரத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு: காங்கிரஸ் எம்எல்ஏ தொடர்ந்தார்
    X

    புதுவையில் கவர்னருக்கு உள்ள அதிகாரத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு: காங்கிரஸ் எம்எல்ஏ தொடர்ந்தார்

    புதுவையில் கவர்னருக்கு உள்ள அதிகாரத்தை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் இப்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் மற்ற மாநிலங்களை விட இங்குள்ள கவர்னருக்கு சில வி‌ஷயங்களில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதை பயன்படுத்தி கவர்னர் கிரண்பேடி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும், அவரே தனியாக ஒரு போட்டி அரசை நடத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

    இதேபோல் தான் யூனியன் பிரதேசமான டெல்லியிலும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அங்குள்ள கவர்னரும் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதாக புகார் கூறப்பட்டது.


    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் டெல்லி மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கவர்னர் தலையிட கூடாது. அரசு எடுக்கும் முடிவுகளுக்கும் தடை விதிக்க கூடாது என்று உத்தரவிட்டார்கள்.

    இந்த நிலையில் புதுவையிலும் இதேபோன்ற வழக்கு இப்போது தொடரப்பட்டு உள்ளது. புதுவையில் கவர்னர்- அமைச்சரவைக்கு இடையே அதிகாரம் சம்பந்தமாக மோதல் நடந்ததை அடுத்து மத்திய உள்துறை புதுவை அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தது.

    கடந்த 27.1.2017 அன்று அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் கவர்னருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அதில், கவர்னர் அனைத்து கோப்புகளையும் வரவழைத்து பார்ப்பதற்கு அதிகாரம் உள்ளது. தினசரி நடவடிக்கைகளில் அவர் தலையிடலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

    யூனியன் பிரதேச சட்ட விதி 21 (5)-ன்படி இந்த அதிகாரங்கள் கவர்னருக்கு இருக்கின்றன என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இதை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் இப்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    புதுவையில் கவர்னருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அனுப்பி உள்ள உத்தரவு சட்ட விதிகளுக்கு மாறாக உள்ளது. சட்ட விதி 21 (5) பற்றிய விவரங்கள் மத்திய உள்துறை இணைய தளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், அதில் உள்ள ‌ஷரத்துகளுக்கு மாறாக மத்திய உள்துறை புதுவை அரசுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, அந்த உத்தரவை கோர்ட்டு ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் உத்தரவு ஏற்று கொள்ள முடியாததாகும். அந்த உத்தரவை வைத்து கொண்டு கவர்னர் தனக்கு தான் எல்லா அதிகாரமும் இருப்பதாக கூறி அத்து மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரே தனி ஒரு அரசை நடத்தி வருகிறார். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை அவருக்கு அடங்கி நடக்கும் வகையில் நடத்துகிறார்.

    இந்திய அரசியல் சாசன சட்டம் ஆர்டிக்கல் 240-ன்படி கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறும் வகையில் மத்திய உள்துறையின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

    நாட்டின் ஜனாதிபதிக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதை வைத்து கொண்டு ஆட்சி அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது. அரசை மீறும் நடவடிக்கைகளை அவர் செய்ய முடியாது.

    ஆனால், புதுவையில் கவர்னர் எல்லாவற்றையும் மீறி செயல்படுகிறார். எனவே, அவரது அதிகாரம் சம்பந்தமாக கோர்ட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ராமச்சந்திர அய்யரின் தனி நபர் பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கை 4 வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×