search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

    காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று அதே இடத்தில் நீடித்த போதிலும் அடுத்த 2 நாட்களில் வடக்கு நோக்கி நகரும் என்பதால், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. சில நாட்களில் பருவமழை தீவிரம் அடைந்தால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மழை ஓய்ந்த நிலையில், வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. நேற்று பகலிலும் தூறிக்கொண்டே இருந்தது. மாலை யிலும், இரவிலும் பலத்த மழை பெய்தது.

    இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், என்றாலும் அடுத்த 2 நாட்களில் மழை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    கடந்த 10-ந் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களாக தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சற்று வலுப்பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து இருக்கிறது.

    தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 2 நாட்களில் வட திசையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும்.

    இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

    தமிழகத்தில், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    பொன்னேரி, நுங்கம்பாக்கம், மாதவரம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும், சென்னை டி.ஜி.பி அலுவலகம், கொளப்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், அரண்மனைபுதூர், தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழையும், சோழவரம், செங்குன்றம், தரமணி ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும், திருவள்ளூரில் 2 செ.மீ. மழையும், தாம்பரம், மாமல்லபுரம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, பூண்டி ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. 
    Next Story
    ×