search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வேனில் ரேசன் அரிசி கடத்தல்
    X

    கொடைக்கானல் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வேனில் ரேசன் அரிசி கடத்தல்

    கொடைக்கானல் அருகே அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான வேனில் ரேசன் அரிசி கடத்தப்பப்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமமான கே.சி.பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக அங்குள்ள சத்துணவு கூடத்தில் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இங்கு இருப்பு வைக்கப்பட்ட அரிசி மூடைகளில் 4 மூடைகளை கீழ்மலை அ.தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான வாகனத்தில் கடத்திச் செல்வதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த வேனை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி மகேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் அவர் சம்பவ இடத்துக்கு வரவில்லை. தொலைபேசியில் தெரிவிக்கையில், விடுமுறை தினத்தில் பள்ளியை திறந்து அரிசி மூடைகளை எடுத்தது தவறு. இச்செயலை யார் செய்திருந்தாலும் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    ரேசன் அரிசியுடன் பிடிபட்ட வேனை பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்தனர். வேனை ஓட்டி வந்த டிரைவர் பொதுமக்களிடம் கண்ணீர் விட்டு அழுது தனக்கும் இச்சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி வேனை எடுத்துச் சென்றார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், பிடிபட்ட வேன் அ.தி.மு.க. முன்னாள் யூனியன் சேர்மன் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமானது. இவரது மகள் கவிரேகா என்ற கவிதா சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் மாதத்தின் சில நாட்கள் மட்டுமே சத்துணவு கூடத்துக்கு வருவார். மற்ற நாட்கள் வருவதில்லை. இன்று விடுமுறை நாளில் பள்ளி சத்துணவு கூடத்தை திறந்து ரேசன் அரிசியை கடத்தும் போது நாங்கள் பிடித்து விட்டோம்.

    இது குறித்து அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளோம். ஆனால் யாரும் வரவில்லை என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×